sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தங்க கவசத்தில் கோட்டை மாரியம்மன் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

/

தங்க கவசத்தில் கோட்டை மாரியம்மன் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

தங்க கவசத்தில் கோட்டை மாரியம்மன் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

தங்க கவசத்தில் கோட்டை மாரியம்மன் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்


ADDED : ஆக 08, 2024 02:03 AM

Google News

ADDED : ஆக 08, 2024 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவுக்கு கடந்த மாதம், 7ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. தொடர்ந்து கொடியேற்றம், கம்பம் நடுதல், திருக்கல்யாணம், ஊஞ்சல் உற்சவம், சக்தி அழைப்பு, சக்தி கரக நிகழ்ச்சி நடந்தது.

நேற்று முன்தினம் பொங்கல் வைபவம், உருளுதண்டம் நிகழ்ச்சிகள் தொடங்கின. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரண்டனர். நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை, விடிய விடிய கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்தனர். அதேபோல் நேர்த்திக்கடனாக உருளுதண்டம் செலுத்தி வருகின்றனர்.

ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். அலகு குத்தியும், அக்னிசட்டி எடுத்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அம்மன் தங்க கவசத்தில் ஜொலித்தார். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.

பக்தர்கள் சார்பில் பல்வேறு இடங்களில் கூழ், சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டன. மின்விளக்குகளால் கோவில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் மாநகர போலீசார் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இன்றும், நாளையும் பொங்கல் வைபவம், உருளுதண்டம் நிகழ்ச்சி நடக்கிறது. 10ல் கூடுதுறை பவானி ஆற்றில் கம்பம் விடுதல், 11 இரவு, 11:30 மணிக்கு சப்தாபரணம், 12 மதியம், 3:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. வரும், 16 வரை திருவிழா நடக்கிறது.

குகையில் தீ மிதி விழா

சேலம் குகை காளியம்மன், மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா நடந்தது. அதில் பூசாரியை தொடர்ந்து வேண்டுதல் வைத்த ஏராளமான பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றிய அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல் செவ்வாய்ப்பேட்டை கபிலர் தெருவில் உள்ள காளியம்மன், முனியப்பன் கோவிலில், 59ம் ஆண்டு ஆடித்திருவிழாவையொட்டி நடந்த பால்குட ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து பூங்கரகம், அக்னி கரகம் நடந்தது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் உடலில் அலகு குத்தி, குகை பகுதியில் உள்ள நந்தவனத்தில் இருந்து ஊர்வலமாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தனர்.

சேலம், அம்மாபேட்டை பலப்பட்டரை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பொங்கல், உருளுதண்டம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர் குழந்தைகளுடன் வரிசையில் நின்று குண்டம் இறங்கினர். இன்று கரக வேடிக்கை, மாவிளக்கு ஊர்வலம், நாளை வண்டி வேடிக்கை நடக்கிறது.

கண்ணனுார் மாரியம்மன்

தாரமங்கலம், கண்ணனுார் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு அம்மன் அழைக்கும் விழா நடந்தது. தொடர்ந்து, பூசாரி தீ மிதித்து விழாவை தொடங்கிவைத்தார். தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், அரை கி.மீ.,க்கு வரிசையில் காத்திருந்து தீ மிதித்தனர். சில பக்தர்கள் தீச்சட்டி, அலகு, உடம்பில் வேப்பிலை கட்டி தீ மிதித்தனர். இந்த விழா, 6 மணி நேரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து கோழி, ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்ந்து மாலையில் அங்குள்ள பத்ரகாளியம்மன் கோவிலில், 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி முக்கிய வீதிகள் வழியே, கண்ணனுார் மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். இதில் விமான அலகு, கார், காளி வேடம் அணிந்தும், முதுகில் வாள்களை குத்தி பக்தர்கள் வந்தனர். மகுடஞ்சாவடி, கன்னந்தேரி ஊராட்சி கோசாரிப்பட்டி பச்சியம்மன் கோவிலில் நேற்று பல்வேறு வித அபிஷேகம், ஆராதனை நடந்தன. தொடர்ந்து சுவாமி ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பலர், ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

'கம்பம்' நடல்

ஆட்டையாம்பட்டி வேலநத்தம் செங்குந்தர் பாவடி நல அறக்கட்டளை கட்டுப்பாட்டில் உள்ள புது மாரியம்மன் கோவில், முத்துக்குமார சுவாமி கோவிலில் நேற்று மூலவர் அம்மனுக்கு எதிரே அர்த்த மண்டபத்தில் கோவில் பூசாரி, கம்பத்தை நட்டு சிறப்பு பூஜை செய்து மகா தீபாராதனை காட்டினார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். சக்தி அழைத்தல், பொங்கல், மாவிளக்கு ஊர்வலம், சத்தாபரண ஊர்வலம் ஆகிய உற்சவங்கள், வரும், 13ல் நடக்க உள்ளன. 14ல் பூவோடு எடுத்தல், அக்னி கரகம் ஊர்வலம், கூழ் அமுது படைத்தல் உற்சவங்கள், 15ல் பொங்கல் வைத்தல், வண்டி வேடிக்கை, கம்பம் காவிரியில் சேர்த்தல் ஆகியவை நடக்கும். 16ல் பூந்தேர், பூங்கரகம் ஊர்வலங்கள், 17ல் மஞ்சள் நீராட்டு வசந்த விழாவுடன் ஆடித்திருவிழா நிறைவு பெறும்.






      Dinamalar
      Follow us