/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பஸ்சை நிறுத்தாமல் ஓட்டி டிரைவர் சாமர்த்தியம்
/
பஸ்சை நிறுத்தாமல் ஓட்டி டிரைவர் சாமர்த்தியம்
ADDED : ஜூன் 27, 2024 04:09 AM
பனமரத்துப்பட்டி: கன்டெய்னர் லாரி இருமுறை மோதியும் அரசு டவுன் பஸ்சை அதன் டிரைவர் நிறுத்தாமல் ஓட்டியதால் பயணியர் உயிர் தப்பினர்.
மல்லுாரில் இருந்து நேற்று காலை, 8:10 மணிக்கு, 50க்கும் மேற்பட்ட பயணியருடன், தடம் எண்: 100 அரசு டவுன் பஸ், சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. மல்லுார் தனியார் பாலிடெக்னிக் அருகே சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில் வந்தபோது பஸ் பின்புறம் கன்டெய்னர் லாரி வந்தது.
அப்போது வலது புறம் நுழைந்த கார் மீது மோதாமல் இருக்க, லாரி டிரைவர் இடது புறம் திருப்பினார். அப்போது பஸ் பின்புறம், லாரி மோதியது. பஸ் டிரைவர் சாமர்த்தியமாக நிறுத்தாமல் ஓட்டிச்சென்றார். இருப்பினும் கட்டுப்பாட்டை இழந்த லாரி மீண்டும் பஸ் பின்புறம் மோதியது. இதில் பஸ்சின் பின்பகுதி சேதம் அடைந்தது.
இதில் நிலை தடுமாறி பஸ்சின் உள்ளே கண்டக்டர் பொன்னுசாமி விழுந்தார். அவர் மீது, 6 பயணியர் விழுந்தனர். இதில் பொன்னுசாமி, 3 பயணியர் சிறு காயம் அடைந்தனர். தலையில் காயம் அடைந்த பயணியான, அத்தனுார் கிருஷ்ணன், 51, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கண்டக்டர், அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். முதலில் லாரி மோதியதும், டிரைவர் கிருபாகரன் பஸ்சை நிறுத்தியிருந்தால், பஸ்சின் உள்ளே லாரி புகுந்து உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். டிரைவர், தொடர்ந்து பஸ்சை ஓட்டியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.