/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேலும் 2 ஆடுகளை கொன்ற விலங்கு மேட்டூர் அருகே விவசாயிகள் மறியல்
/
மேலும் 2 ஆடுகளை கொன்ற விலங்கு மேட்டூர் அருகே விவசாயிகள் மறியல்
மேலும் 2 ஆடுகளை கொன்ற விலங்கு மேட்டூர் அருகே விவசாயிகள் மறியல்
மேலும் 2 ஆடுகளை கொன்ற விலங்கு மேட்டூர் அருகே விவசாயிகள் மறியல்
ADDED : செப் 15, 2024 04:05 AM
மேட்டூர்: மேட்டூர் அருகே, மேலும் இரு ஆடுகளை மர்ம விலங்கு கடித்துக்கொன்றதால், கொளத்துார் வன சோதனைச்சாவடி அருகே, விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் கொளத்துார், தின்னப்பட்டி ஊராட்சி வெள்ளக்கரட்டூரில் சுரேஷ் தோட்டத்தில் ஒரு வெள்ளாட்டை மர்ம விலங்கு சில நாட்களுக்கு முன் கடித்து கொன்றது. கடந்த, 11ல் அதே பகுதியில் தேவராஜ் பட்டியில், 5 ஆடுகள் பலியாகின. மறுநாள் அதே பகுதி பெருமாளுக்கு சொந்தமான, 3 கோழிகளை கவ்வி சென்றது.மர்ம விலங்கு சிறுத்தைதான் என விவசாயிகள் கூறியதால் மேட்டூர் வனத்துறையினர், வெள்ளக்கரட்டூர், புதுவேலமங்கலம் என இரு இடங்களில் கூண்டு வைத்து, மூன்று நாட்களாக ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று, மேட்டூர் அணை கரையோரம் தானமூர்த்திகாட்டில் விவசாயி அல்லிமுத்துவின் இரு ஆடுகளை விலங்கு கடித்து கொன்றது. தவிர இரு ஆடுகள் மாயமாகியுள்ளன. இதனால் தின்னப்பட்டி ஊராட்சி விவசாயிகள், 50க்கும் மேற்பட்டோர், இறந்த ஆடுகளுடன் மேட்டூர் - மைசூரு சாலையில் உள்ள கொளத்துார் வன சோதனைச்சாவடிக்கு, நேற்று மாலை வந்து மறியலில் ஈடுபட்டனர். வனத்துறை அலட்சியத்தால் சிறுத்தையின் வேட்டை தொடர்வதாக குற்றம் சாட்டினர். கலெக்டர், மாவட்ட வன அலுவலர் வரவேண்டும் என்று, டி.எஸ்.பி., ஆரோக்யராஜிடம் கூறினர். தொடர்ந்து பேச்சு நடத்தியும் இரவு, 7:00 மணி வரை மறியல் நீடித்தது. இதனால் மேட்டூர் - மைசூரு சாலையில் போக்குவரத்து முடங்கியது.
இரவு, 8:00 மணிக்கு விவசாயிகளிடம், சேலம் மாவட்ட வனஅலுவலர் காஷ்யப் சஷாங்க் ரவி பேச்சு நடத்தினார். அப்போது, 'சிறுத்தையை பிடிக்க சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து பயிற்சி பெற்ற ஊழியர்களை வரவழைக்கவும், கூடுதல் கூண்டு, மயக்க ஊசி நிபுணர்கள் வரவழைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இதை ஏற்ற விவசாயிகள், மாலை, 5:45 முதல், 8:30 மணி வரை நடத்திய சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தாசில்தார் அதிர்ச்சி
மேட்டூர் தாசில்தார் ரமேஷ், நேற்று முன்தினம் ஜீப்பில் தின்னப்பட்டி ஊராட்சிக்கு சென்று ஆய்வு செய்தார். திரும்பும் வழியில் இரவு, 8:00 மணிக்கு, சாலையோரம் சிறுத்தை படுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் சிறுத்தை, வனப்பகுதியில் ஓடி தலைமறைவாகி விட்டது.