/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
4 ஆண்டாக திறக்கப்படாத மண்டபம்: சுப நிகழ்ச்சிக்கு மக்கள் திண்டாட்டம்
/
4 ஆண்டாக திறக்கப்படாத மண்டபம்: சுப நிகழ்ச்சிக்கு மக்கள் திண்டாட்டம்
4 ஆண்டாக திறக்கப்படாத மண்டபம்: சுப நிகழ்ச்சிக்கு மக்கள் திண்டாட்டம்
4 ஆண்டாக திறக்கப்படாத மண்டபம்: சுப நிகழ்ச்சிக்கு மக்கள் திண்டாட்டம்
ADDED : செப் 05, 2024 03:01 AM
மகுடஞ்சாவடி: திருமண மண்டபம், 4 ஆண்டுகளாக திறக்கப்படாததால் சுபநிகழ்ச்சிக்கு தனியார் மண்டபங்களில் கூடுதல் செலவு செய்து மக்கள் பயன்படுத்தும் நிலை உள்ளது.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஒன்றியம் அ.புதுாரில், 43 குக்கிராமங்கள் உள்ளன. 6,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்கள் குடும்பத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த, அழகப்பம்பாளையத்தில், 4,000 சதுரடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், 2017 - 18ல், 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, திருமண மண்டப கட்டுமானப்பணி தொடங்கி, 2020ல் நிறைவு பெற்றது. ஈரடுக்கு மண்டபமாக கட்டப்பட்ட நிலையில், 4 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் பூட்டப்பட்டுள்ளது. இதனால் மண்டபத்தை சுற்றிய காலி இடங்களில் புல், பூண்டு முளைத்து காணப்படுகிறது. சிலர், மது அருந்தும் இடமாக பயன்படுத்துகின்றனர்.
மேலும் நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு, காதுகுத்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த, பல கி.மீ., சென்று, அதிக செலவில், தனியார் மண்டபங்களில் நடத்தும் நிலை உள்ளது. இதனால் திருமண மண்டபத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து அ.புதுார் ஊராட்சி தலைவர் சி.ஐயமுத்து, 82, கூறுகையில், ''சாவியை ஒப்படைக்க, பி.டி.ஓ., மறுக்கிறார். இதுகுறித்து, 10 நாட்களுக்கு முன் கலெக்டருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். மண்டபம் திறக்க நடவடிக்கை வேண்டும்,'' என்றார்.
மகுடஞ்சாவடி பி.டி.ஓ., செந்தில்முருகன்(கி.ஊ.,) கூறுகையில், ''4 மாதங்களுக்கு முன் வட்டார அளவிலான மகளிர் கூட்டமைப்பிடம் சாவியை ஒப்படைத்துவிட்டேன்,'' என்றார்.