ADDED : மே 02, 2024 02:50 AM
சேலம்:ஏற்காட்டில் தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில், 5 பேர் உயிரிழந்தனர். இதில் விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து, தகவல் வெளியாகி உள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று முன்தினம் மாலை, 'முத்து' என்ற தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில், 5 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த, 65 பேர், சேலம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று, 20க்கும் மேற்பட்டோர் வேறு மருத்துவமனைகள் மற்றும் வீடுகளுக்கு திரும்பினர். இதுதொடர்பாக ஏற்காடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
விபத்து குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
ஏற்காடு, வாழவந்தியை சேர்ந்த டிரைவர் ஜனார்த்தனன், 33, என்பவர், 70 பயணியருடன் அதிவேகமாக, 13வது கொண்டை ஊசி வளைவில் பஸ்சை திருப்பியுள்ளார். டிரைவர் அஜாக்கிரதையால், தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு பஸ் பள்ளத்தில் பறந்து, 100 மீட்டருக்கு கீழ் மரத்தில் மோதியது. மோதிய வேகத்தில் பஸ் ஆடி, மறுபடியும் பள்ளத்தை நோக்கி சென்று மரத்தில் மோதி, அதில் திரும்பி நேராக பாறையில் மோதி நின்றது.
மரம் இல்லை என்றால் உயிரிழப்பு எகிறி இருக்கும். வழக்கமாக இயக்கும் இடம் என்பதால் அவர் அஜாக்கிரதையாகவும், யாரிடமோ பேசியபடியும் ஓட்டி இருக்கலாம். கூட்டம் அதிகமானதற்கும் விபத்துக்கும் சம்பந்தம் இல்லை.
வளைவில், 2வது கியரில், 20 கி.மீ., வேகத்தில் தான் செல்ல வேண்டும். ஆனால் டிரைவர், கியரை குறைக்காமல், 3வது கியரில் வந்திருப்பார். மேலும் கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் உள்ள தடுப்பு சுவர்கள் குறைந்த உயரத்தில் பலமின்றி உள்ளன. இதை மாற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன்(பொ) கூறியதாவது:
பஸ்சை ஆய்வு செய்ததில் குறைபாடு இல்லை. டிரைவர், கனரக வாகன உரிமம் வாங்கியதும், லாரி டிரைவராக இருந்தார். பின் வெறும், 2 ஆண்டுகள் தான், மலைப்பகுதியில் பஸ் ஓட்டிய அனுபவம் உள்ளது. இதுவும் விபத்துக்கு ஒரு காரணம்.
ஏனெனில் லாரி விபத்தில் சிக்கினால் உயிரிழப்பு குறைவு. பஸ்சை டிரைவர் ஓட்டும்போது, அவரை நம்பி, 50 பேர் உள்ளனர் என்ற எண்ணம் வேண்டும். அதேபோல், 48 பேர் இருக்கக்கூடிய பஸ்சில், 70 பேருடன் செல்லக்கூடாது. மேலும் வாகனங்களில் எந்த கியரில் மேலே ஏறுகிறோமோ, அதே கியரில், அதாவது, 2 அல்லது 3வது கியரில்தான் இறங்க வேண்டும்.
மலைப்பாதைகளில், 30 கி.மீ., வேகம், வளைவுகளில், 20 கி.மீ., வேகத்தில் செல்ல வேண்டும். டயர் கன்டிஷன் சரியாக உள்ளதா என, பார்க்க வேண்டும். வாகனத்தில் தொடர்ந்து, 'பிரேக்' அடித்துக்கொண்டு இருந்தால் அது பிடிக்காமல் போய்விடும். இதை தவிர்க்க, ஒரு வாகனங்கள் இடையே குறிப்பிட்ட இடைவெளியில் செல்ல வேண்டும். அப்போது அடிக்கடி பிரேக் போட வேண்டியதில்லை. ஏறுவதை விட இறங்கும்போது ஜாக்கிரதையாக ஓட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
டிரைவர் தப்பியது எப்படி
இந்த விபத்தில், ஏற்காடு, வாழவந்தியை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் ஜனார்த்தனன், விபத்தின்போது வண்டியின், 'ஸ்டியரிங்'கை கடைசி வரை கெட்டியாக இறுக்கி பிடித்துக்கொண்டார். அவருக்கு கை சற்று இறங்கியுள்ளதோடு, முகத்தில் மட்டும் காயம் ஏற்பட்டது. வண்டி மோதி நின்றதும், டிரைவர் இறங்கி தப்பி ஓடிவிட்டார்.
அவரை போலீசார் தேடியபோது இரவில் அம்மாபேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது தெரிந்தது. அவரிடம் விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'கவனக்குறைவாக பஸ்சை ஓட்டியதால், 4 பிரிவுகளில் ஜனார்த்தனன் மீது ஏற்காடு போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். விபத்தில் சிக்கிய பஸ்சின் பர்மிட், டிரைவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய, ஆர்.டி.ஓ.,வுக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.

