ADDED : ஜூலை 03, 2024 11:11 AM
பனமரத்துப்பட்டி: மல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவர்கள் சிலர், முடி திருத்தம் செய்யாமல், சரியாக சீருடை அணியாமல் வந்தனர். இதுகுறித்து அந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்கி இருந்தனர். தொடர்ந்து அப்படியே வந்ததால், நேற்று காலை பெற்றோரை அழைத்து வரும்படி கூறி மாணவர்களை வீட்டுக்கு அனுப்பினர்.
சில மாணவர்கள், மதியம் 1:00 மணிக்கு, பள்ளி முன், சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மல்லுார் போலீசார் விசாரித்து, மாணவர்களை பள்ளிக்கு அனுப்பினர்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், ''பெற்றோரை அழைத்து வரும்படி அனுப்பினோம். ஆனால் வெளியாட்ளை அழைத்து வந்து ஆசிரியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். பெற்றோரை அழைத்து வந்தால்தான் வகுப்பில் சேர்ப்போம் என, கண்டிப்புடன் தெரிவித்தோம். பின் வெளியாட்களின் துாண்டுதலால் மாணவர்கள் சாலையில் அமர்ந்தனர். இதனால் அவர்களின் எதிர்காலம்தான் பாதிக்கும்' என்றனர்.