ADDED : டிச 15, 2024 12:58 AM
மேட்டூர், டிச. 15-
பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு, ரேஷன் கடைகளில் அனைத்து கார்டுதாரர்களுக்கும் செங்கரும்பு வழங்குகிறது. அதன் உற்பத்திக்கு தண்ணீர் அதிகம் தேவை என்பதால் காவிரி கரையோர பகுதிகளில் மட்டுமே செங்கரும்பு அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. அதன்படி மேட்டூர் தாலுகாவில் காவிரி கரையோரம் உள்ள கோல்நாயக்கன்பட்டி, நவப்பட்டி ஊராட்சிகளில், 100 ஏக்கரில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வரும் மார்கழி இறுதியில் கரும்புகள் அறுவடைக்கு தயாராகிவிடும்.
தவிர இரு ஊராட்சிகளிலும், 25 ஏக்கரில் விவசாயிகள், மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். கோவை, ஈரோடு, திருப்பூர், உதகை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து ஆண்டுதோறும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், இந்த இரு ஊராட்சிகளிலும் செங்கரும்பு கொள்முதல் செய்வர். வரும் பொங்கல் வரை செங்கரும்பு கொள்முதல் நடக்கும் என்பதால், வெளிமாவட்ட கூட்டுறவு சங்க நிர்வாகிகள் வரவை எதிர்பார்த்து, இரு ஊராட்சிகளில் செங்கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் காத்திருக்கின்றனர்.