/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வறண்டு கிடக்கும் 101 ஏரிகள்: ஆக்கிரமிப்பால் மாயமான நீர்வழி தடங்கள்
/
வறண்டு கிடக்கும் 101 ஏரிகள்: ஆக்கிரமிப்பால் மாயமான நீர்வழி தடங்கள்
வறண்டு கிடக்கும் 101 ஏரிகள்: ஆக்கிரமிப்பால் மாயமான நீர்வழி தடங்கள்
வறண்டு கிடக்கும் 101 ஏரிகள்: ஆக்கிரமிப்பால் மாயமான நீர்வழி தடங்கள்
ADDED : அக் 17, 2024 02:59 AM
சேலம்: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், சேலத்தில் இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சம் வீரகனுாரில், 28 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. கரியக்கோவில், நத்தக்கரையில் தலா. 21, ஒமலுார், 19, சேலம், 16.9, தம்மம்பட்டி, 13, கெங்கவல்லி, 12, வாழப்பாடி, 11.2, ஏத்தாப்பூர், 8, ஆத்துார், 7.8, டேனிஷ்பேட்டை, 6, ஏற்காடு, 5.8, மேட்டூர், 5.2, ஆணைமடுவு, 5, இடைப்பாடி, 2.4, சங்ககிரி, 1.4 மி.மீ., மழை பெய்துள்ளது.
மழை காரணமாக, ஆத்துார் டவுன் மாரியம்மன் கோவில் தெருவில் சின்னப்பிள்ளை என்பவரின் கூரைவீடு இடிந்து சேதமானது. தலைவாசல், வேப்பம்பூண்டியில் சம்பூரணம் என்பவருக்கு சொந்தமான கூரை வீட்டின் ஒரு பக்க சுவர் சரிந்து விழுந்தது. சேலம் அம்மாபேட்டை டவுன், கிருஷ்ணன் புதுாரில் வீராசாமி என்பவருக்கு சொந்தமான ஓட்டுவீடு முழுமையாக இடிந்துவிட்டது. மாவட்டத்தில், சரபங்கா வடிநில கோட்ட கட்டுப்பாட்டில், 107 ஏரிகள் உள்ளன. இதில், 14 ஏரிகள் மழை காரணமாக, அதன் முழு கொள்ளளவை தாண்டி, உபரிநீர் வழிந்தோடி வருகின்றன. அதன்படி சேலத்தில் கன்னங்குறிச்சி புதுஏரி, காமலாபுரம் பெரியேரி, காமலாபுரம் சிறிய ஏரி, பூலா ஏரி, தாரமங்கலம் ஏரி, இடைப்பாடி ஏரி, வெம்பன் ஏரி, அம்மம்பாளையம் முட்டல் ஏரி, அபிநவம் ஏரி, செந்தாரப்பட்டி ஏரி, பெரிய சக்கிலி ஏரி, கோட்டகுள்ளப்புடையான் ஏரி, பன்னப்பட்டி ஏரி, பி.என்.பட்டி ஏரி என, 14 ஏரிகள் முழுமையாக நிரம்பி விட்டன. குள்ளம்பட்டி ஏரி, நாச்சம்பட்டி ஏரி நிரம்பும் தருவாயில் உள்ளன. பொன்னுசமுத்திரம் ஏரி, 83 சதவீதம் நிரம்பிவிட்டது. தவிர, 75 சதவீதத்துக்கு மேல், 10 ஏரிகள், 50 - 75 சதவீதம் வரை, 3 ஏரிகள், 25 -50 சதம் வரை, 9 ஏரிகள், 25 சதத்துக்குள் கீழாக, 7 ஏரிகளில் தண்ணீர் நிரம்பி உள்ளன. 61 ஏரிகளில் நீரளவு '0' நிலையில் உள்ளன. 107 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 1,774.150 மி.கன அடி நீர். தற்போது, 46 ஏரிகளில் மொத்தமாக, 423.038 மி.கன அடிநீர் ததும்பி உள்ளன. மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில், 192 ஏரிகள் உள்ளன. இதில், 20 ஏரிகள் முழுமையாக நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகின்றன. 15 ஏரிகளில், 75 சதமும், 21 ஏரிகளில், 50 சதமும், 96 ஏரிகளில், 50 சதத்துக்கும் குறைவாக தண்ணீர் தேங்கி உள்ளன. 40 ஏரிகளில் அறவே தண்ணீர் இல்லாமல் வறண்டுள்ளது.வீரபாண்டி உழவர் உற்பத்தியாளர் குழு தலைவரான விவசாயி மாதேஷ் கூறுகையில்,''சேலம் மாவட்டத்தில் இயல்பை விட அதிக மழை பெய்தும், வசிஷ்ட நதி வழியாக சென்று கடலில் கலக்கிறது. அதை தடுத்து முறையாக சேமிக்க நீர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டும். நீர் ஆதார பகுதி, வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்வரத்தை மேம்படுத்தினால் மட்டுமே அனைத்து ஏரிகளும் நிரம்பும். குறிப்பாக, துார்ந்துபோன நீர்வழிதடத்திலும், நீர்பிடிப்பு பகுதிகளிலும் முறையாக துார் வாரினால் மட்டுமே, கொள்ளளவு நீரை முழுமையாக சேமிக்க முடியும்,' என்றார்.