/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை பூங்காவில் 14 நாய்களுக்கு தடுப்பூசி
/
மேட்டூர் அணை பூங்காவில் 14 நாய்களுக்கு தடுப்பூசி
ADDED : ஆக 22, 2025 01:46 AM
மேட்டூர், மேட்டூர் அணை பூங்காவில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. கடந்த வாரத்தில், 2 நாட்களில் மட்டும், 10 சுற்றுலா பயணியரை நாய்கள் கடித்தன. இதனால் அங்கு வரவே சுற்றுலா பயணியர் அச்சப்படும் சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், மேட்டூர் நகராட்சி, கால்நடை பராமரிப்பு துறை சார்பில், கால்நடை மருத்துவர் செந்தில்குமார், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மோகன் மற்றும், 12 கண்காணிப்பாளர் குழுவினர், நேற்று முன்தினம் பூங்காவில் வலைவீசி நாய்களை பிடித்து, தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி, 11 நாய்களுக்கு தடுப்பூசி போட்டனர்.
நேற்றும் அக்குழுவினர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி சார்பில் எடுத்துச்சென்ற பழைய வலையில் சிக்கிய சில நாய்கள், அதை அறுத்துக்கொண்டு வெளியேறிவிட்டன. இதனால் தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்பட்டு, 3 நாய்களுக்கு மட்டும் ஊசி போடப்பட்டது. இனி தரமான வலைகளை கொண்டு வந்து நாய்களை பிடித்து, தடுப்பூசி போடப்படும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இப்பணியால் இரு நாட்களாக, மதியம் வரை பூங்காவுக்குள் சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்படவில்லை.
ஒரே நாளில்
27 நாய்கள் பிடிப்பு
சேலம், கொங்கணாபுரம் அருகே நாய் கடித்து தறித்தொழிலாளி பலியான சம்பவத்தை தொடர்ந்து, தெரு நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.
சேலம் கலெக்டர் அலுவலகம் உள்பட மாநகராட்சியின், 4 மண்டலங்களிலும் நேற்று மாநகராட்சி பணியாளர்கள், வலைகளுடன் தெருநாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரே நாளில், 27 நாய்களை பிடித்து, கருத்தடை அறுவை சிகிச்சை மையத்துக்கு அனுப்பினர். மேலும் நாய்களின் வேட்டை தொடரும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.