ADDED : ஏப் 22, 2025 01:12 AM
சேலம்:சேலம் மாவட்டம், காரிப்பட்டி அருகே காட்டூரை சேர்ந்தவர் மோகனாம்பாள், 60. இவரது மகன் கோவிந்தராஜ், 38, தொழிலாளி. இவர்கள், நேற்று மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின், கோவிந்தராஜ் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை தடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது கோவிந்தராஜ் கூறுகையில், ''எனது உறவினர் ஒருவர், எனது தாய்க்கு கொடுக்க வேண்டிய, 30 சென்ட் நிலத்தை வழங்காமல் இருந்து வருகிறார். இது தொடர்பாக பலமுறை கேட்டும் கொடுக்கவில்லை. காரிப்பட்டி போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நிலத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
* தீவட்டிப்பட்டி அருகே தும்பிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை, 65. இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது அவர், பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதை தடுத்து அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது சின்னதுரை கூறுகையில், ''எனது வீட்டிற்கு கடந்த மூன்று ஆண்டுகளாக குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. எனது ஊரை சேர்ந்த சிலரின் பேச்சை கேட்டு, ஊராட்சி செயலர் குடிநீர் பைப் லைன் இணைப்பை, தன் வீட்டிற்கு செய்து கொடுக்கவில்லை,'' என்றார். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த முதியவர் மனு கொடுத்து விட்டு சென்றார்.