/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வன்கொடுமை வழக்கில் 4 பேருக்கு சிறை, அபராதம்
/
வன்கொடுமை வழக்கில் 4 பேருக்கு சிறை, அபராதம்
ADDED : ஆக 21, 2025 02:27 AM
தலைவாசல், தலைவாசல், புத்துாரை சேர்ந்த விவசாயி சேகர். இவரது நிலம் அருகே, 2016 ஆக., 7ல், மண் சமன்படுத்தும் பணி மேற்கொண்டார். அப்போது அதே பகுதியை சேர்ந்த, விவசாயி கள் நல்லதம்பி, 41, துரைவேல், 36, சங்கர், 43, சின்னையன், 46, ஆகியோர் தகராறு செய்தனர். தொடர்ந்து சேகர், அவரது மனைவி முத்து லட்சுமி, தாய் அங்கம்மாளை, இரும்பு கம்பி, உருட்டு கட்டையில் தாக்கினர்.
காயம் அடைந்த மூவரும், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சேகர் அளித்த புகாரில், தலைவாசல் போலீசார், வன்கொடுமை தடுப்பு சட்டம் (எஸ்.சி., - எஸ்.டி.,) உள்பட, 7 பிரிவுகளில், 4 பேர் மீது வழக்குப்பதிந்தனர். இந்த வழக்கு, 2017ல், சேலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பின், சேலம் வன்கொடுமைகள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அதில் நேற்று முன்தினம் நல்லதம்பிக்கு, 51 மாத சிறை, 11,000 ரூபாய் அபராதம்; துரைவேலுக்கு, 15 மாத சிறை, 3,000 ரூபாய் அபராதம்; சங்கர், சின்னையனுக்கு, தலா, 15 மாத சிறை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஜெயசிங் உத்தரவிட்டார். மேலும் அபராத தொகை, 18,000 ரூபாயை, பாதிக்கப்பட்ட சேகர் குடும்பத்தினருக்கு வழங்க அறிவுறுத்தினார்.