ADDED : செப் 23, 2026 06:47 AM

சேலம்:தமிழக
அரசு சார்பில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி, சேலம்
மாவட்டத்தில், 5 பிரிவுகளில், கடந்த, 9ல் தொடங்கியது. அதில் தமிழகம்
முழுதும் மாற்றுத்திறனாளிகள் பிரிவில், 38,057 பேர் பதிவு செய்தனர்.
அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில், 5,760 பேர் பதிவு செய்தனர்.
இதன்மூலம்
மாநில அளவில் முதலிடத்தை சேலம் பிடித்தது. 2,053 பேருடன் தர்மபுரி
மாவட்டம், 2ம் இடம் பிடித்தது. குறைந்தபட்சமாக நீலகிரி
மாவட்டத்தில், 137 பேர் பதிவு செய்திருந்தனர்.
பள்ளி, கல்லுாரி
மாணவர்கள், மக்கள், அரசு ஊழியர்களுக்கு போட்டி முடிந்த நிலையில்,
நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டி, காந்தி மைதானத்தில்
நடந்தது. 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 100, 200 மீ., ஓட்டம்,
குண்டு எறிதல், இறகுப்பந்து, கபடி, சக்கர நாற்காலி மேசைப்பந்து,
வாலிபால், த்ரோ பால் போட்டிகள் நடத்தப்பட்டன. ஸ்டேடிய உள்
விளையாட்டு அரங்கில், சக்கர நாற்காலி மேசைப்பந்து போட்டி
நடத்தப்பட்டது.
ஒரு டேபிள் மட்டும் இருந்ததால், மற்ற மாற்றுத்திறனாளிகள் காத்திருந்து அவதிப்பட்டனர்.
இதுகுறித்து
மாவட்ட விளையாட்டு அலுவலர் கண்மணிதேவி கூறுகையில், ''காலை வரை,
10க்கும் குறைவானவர்கள் மட்டும் மேசைப்பந்து போட்டியில் பங்கேற்க
இருந்ததால், ஒரு டேபிளில் தொடங்கியது. மதியத்துக்கு மேல்
போட்டியாளர்கள் அதிகம் பேர் வந்தனர். தொடர்ந்து, 3 டேபிள்கள் எடுத்து
வரப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது,'' என்றார்.
