ADDED : ஏப் 29, 2026 06:28 AM
பனமரத்துப்பட்டி, வேளாண் பயிர்கள் வறட்சியை தாங்கி வளர்ந்து நல்ல மகசூல் கொடுக்க, இயற்கை உயிர் உரமான மெத்தோலோபாக்டீரியம் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல் அமீத் கூறியதாவது:
மழையின்றி வறட்சியால் பயிர்களில் மகசூல் பாதிப்பு ஏற்படும். இயற்கை உயிர் உரமான மெத்தோலோபாக்டீரியம்(பிபிஎப்எம்) பயன்படுத்தி, வறட்சி காலத்திலும் நல்ல மகசூல் பெறலாம். இது விதை முளைப்பு, நாற்று வளர்ச்சியை வேகப்படுத்தவும், தாவர வளர்ச்சியை துரிதப்படுத்தவும், பூக்கள், காய்கள் உருவாகி முதிர்ச்சி அடைதல், பழத்தின் தரம், நிறம் மற்றும் விதை எடையை மேம்படுத்த உதவுகிறது.
ஒரு ஏக்கருக்கு, 1,000 மில்லி பி.பி.எப்.எம்., பயன்படுத்த வேண்டும். ஒரு லிட்டர் நீரில், 5 மில்லி பி.பி.எப்.எம்., வீதம் கலந்து, இலை வழியில் தெளிக்க வேண்டும். இது வறட்சியை தாங்கி வளர்ந்து, 10 சதவீதம் கூடுதல் மகசூல் கொடுக்கும். பூச்சிக்கொல்லி, பூஞ்சைக்கொல்லியுடன் பி.பி.எப்.எம்., கலக்க வேண்டாம். விபரம் பெற, பனமரத்துப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தை
அணுகலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
