/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'நானோ' தொழில்நுட்பம் பயன்படுத்த அறிவுரை
/
'நானோ' தொழில்நுட்பம் பயன்படுத்த அறிவுரை
ADDED : ஏப் 29, 2024 07:05 AM
வீரபாண்டி : பயிர் உற்பத்தியை அதிகரிக்க செய்து கூடுதல் லாபம் பெற, 'நானோ' தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வீரபாண்டி வட்டார வேளாண் துறை உதவி இயக்குனர் கிரிஜா அறிக்கை:தமிழக வேளாண் பல்கலை, 'விகர் ப்ளஸ்' எனும், 'நானோ' கரைசலை கண்டுபிடித்துள்ளது. இது விதைப்பதற்கு முன் விதைகளின் மீது பூசும் ஒரு வகை கரைசல். இதில் உள்ள, 'உயிரி பாலிமர்' தாவர வளர்ச்சியை துாண்டும் ஹார்மோன்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ விதைகளை, 2.25 லிட்டர் 'விகர் ப்ளஸ்' நானோ கரைசலை பூசி, அரை மணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். இப்படி செய்தால் முளைப்பு திறன் அதிகரிக்கும். ஒரு லிட்டர் கரைசல் விலை, 600 ரூபாய். இதேபோல் பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்த, 'நானோ' இனக்கவர்ச்சி குப்பிகளை வேளாண் பல்கலை அறிமுகம் செய்துள்ளது. இவ்வகை இனக்கவர்ச்சி குப்பிகளை நடவு செய்த, 35 நாட்களுக்கு பின் ஒரு ஹெக்டேருக்கு, 12 வீதம் வைக்க வேண்டும். இயற்கை முறையில் நெல் தண்டு துளைப்பான் பூச்சியை கட்டுப்படுத்துவதோடு, ஆண் அந்துப்பூச்சிகளை அதிகம் கவரும் தன்மை உடையது. ஒரு இனக்கவர்ச்சி குப்பி, 11 வாரங்கள் வரை ஆண் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கும். பூச்சிகள் அதிகம் உள்ள வயலில் ஹெக்டேருக்கு, 50 குப்பிகள் வரை வைத்து கட்டுப்படுத்தலாம். விவசாயிகள், இந்த வகை, 'நானோ' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயிர் விளைச்சலை பெருக்கி கூடுதல் லாபம் பெறலாம்.

