/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் அ.தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
/
சேலத்தில் அ.தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 31, 2024 07:38 AM
சேலம்: சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை கண்டித்து, சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அமைப்பு செயலர் சிங்காரம் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாஜலம் முன்னிலை வகித்தார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்; மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டிக்கிறோம்; சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய விடியா தி.மு.க. ஆட்சியை கண்டிக்கிறோம்; யார் அந்த சார் என்ற உண்மை வெளிவரும் வரை போராட்டம் தொடரும் என கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.எம்.எல்.ஏ., பாலசுப்பிரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ.,செல்வராஜ், சக்திவேல், முன்னாள் எம்.பி.,பன்னீர்செல்வம், முன்னாள் மேயர் சவுண்டப்பன் உள்பட அ.தி.மு.க.,வினர் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. துணை கமிஷனர் வேல்முருகன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார், கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, 385 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.* சேலம் புறநகர் மாவட்டம் சார்பில், ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே, ஓமலுார் எம்.எல்.ஏ., மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் செம்மலை தலைமையில் அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
எம்.எல்.ஏ.,க்கள் வீரபாண்டி ராஜமுத்து, சங்ககிரி சுந்தரராஜன், ஏற்காடு சித்ரா, முன்னாள் எம்.எல்.ஏ.,வெற்றிவேல், மாநில ஜெ.,பேரவை துணை செயலர் விக்னேஷ், ஒன்றிய செயலர்கள் ராஜேந்திரன், கோவிந்தராஜ், மணிமுத்து, ஓமலுார் நகர செயலர் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார் லாரி மேல் ஏறி, கோஷமிட்ட நபர்களை வலுக்கட்டாயமாக கீழே இறங்க சொல்லி கைது செய்தார். போராட்டத்தில் ஈடுபட்ட, 800க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்த போலீசார், மண்டபத்தில் தங்கவைத்தனர்.
போலீசார் கைது செய்து வேனில் ஏற்றியபோது, மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் தனது ஆதரவாளருடன் ஆர்ப்பாட்டம் நடத்த வந்தார். சிறிது நேரம் அங்கு நின்ற பின் புறப்பட்டார். அதேபோல், மேட்டூரிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன் தாமதமாக வந்தார்.