இடைப்பாடி : இடைப்பாடி அருகே வேம்பனேரி அய்யனாரப்பன் கோவில், வேம்பனேரி, சுற்றுப்பகுதியில் உள்ள கருப்பன் தெரு, சின்ன முத்தியம்பட்டி, பெரிய முத்தியம்பட்டி, காட்டூர், புதுப்பாளையம் உள்பட, 7 ஊர்களை சேர்ந்த, 36 குக்கிராமங்களுக்கு சொந்தமானது. அச்சுவாமி ஊர்வலம், நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. தங்க கீரிடம் அணிவிக்கப்பட்டு, குதிரை வாகனத்தில் சுவாமியை எழுந்தருளச்செய்தனர். தொடர்ந்து, 7 ஊர்களுக்கும், ஊர்வலம் புறப்பட்டது. 2ம் நாளாக நேற்றும் ஊர்வலம் நடந்தது. ஏராளமான வாலிபர்கள், சுவாமியை ஊர்வலமாக துாக்கிச்சென்றனர். இதில் வழிநெடுக, ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர்.
வண்டி ராமர்
-ஏற்காடு, ஒண்டிக்கடை, வண்டி ராமர் கோவிலில், கடந்த, 7ல் சித்திரை திருவிழா தொடங்கியது. ஒரு வார விழாவில், கடைசி நாளான நேற்று, ராமர் சீதாதேவி லட்சுமணன் ஆகியோருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
மாலையில் சிறப்பு அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளச்செய்தனர். பின் தேர் வீதி உலா நடந்தது. கோவிலில் தொடங்கிய வீதி உலா, சந்தைப்பேட்டை வணிக வளாகம் வழியே ஒண்டிக்கடை ரவுண்டானா, அண்ணா பூங்கா வரை சென்று மீண்டும் அதே வழியில் கோவிலை வந்தடைந்தது. இதில் சிறுவர்களுடன் பெண்களும் சேர்ந்து நடனமாடினர்.
போலீஸ் பாதுகாப்புடன் தனித்தனியே திருவிழா
கெங்கவல்லி அருகே நடுவலுார் புத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி, 1ல் திருவிழா நடத்தப்பட்டு வந்தது. ஆனால் திருவிழா, வழிபாடு தொடர்பாக, சில ஆண்டுகளுக்கு முன், இருதரப்பினர் இடையே பிரச்னை எழுந்தது. இதுதொடர்பாக கெங்கவல்லி போலீசார் நடத்திய பேச்சில், ஒரு தரப்பினர், காலை, 6:00 முதல், மதியம், 12:00 மணி வரையும், மற்றொரு தரப்பினர், 12:00 முதல், மாலை, 6:00 மணி வரையும், தனித்தனியே திருவிழா நடத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி நேற்று காலை, 9:00 மணிக்கு ஒரு தரப்பினர் அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் விழாவை நடத்தினர். அதேபோல் மற்றொரு தரப்பினர், மாலை, 3:00 மணிக்கு பொங்கல் விழாவை நடத்தினர். இதையொட்டி ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் உள்பட, 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

