/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின்மாற்றி பழுதுபார்க்க ரூ.30,000 வசூலித்து 'ஏப்பம்' 1,000 ஏக்கர் விளைநிலம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
/
மின்மாற்றி பழுதுபார்க்க ரூ.30,000 வசூலித்து 'ஏப்பம்' 1,000 ஏக்கர் விளைநிலம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
மின்மாற்றி பழுதுபார்க்க ரூ.30,000 வசூலித்து 'ஏப்பம்' 1,000 ஏக்கர் விளைநிலம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
மின்மாற்றி பழுதுபார்க்க ரூ.30,000 வசூலித்து 'ஏப்பம்' 1,000 ஏக்கர் விளைநிலம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 21, 2025 12:43 AM
சேலம், மின்மாற்றி பழுதான நிலையில், விவசாயிகளிடம், 30,000 ரூபாய் வசூலித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், 1,000 ஏக்கரில் விளைநிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக, குறைதீர் கூட்டத்தில் விவசாயி குற்றம்சாட்டினார்.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். அதில் விவசாயிகள் பேசியதாவது:
நாகராஜ்: மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் ஆக., 15ல் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், அதற்கு முன் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகளை வழங்கினால், நவப்பட்டி, கோல்நாயக்கன்பட்டி ஊராட்சிகளில், 1,000 ஏக்கர் விளைநிலங்களின் மண் வளம் மேம்படுத்தப்படும்.
குமாரசாமி: கடலை பறிக்க, தேங்காய் மரம் ஏற, மஞ்சள் தோண்ட ஆகிய கருவிகளை வாடகைக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். கெங்கவல்லி பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் வேண்டும்.
மிரட்டி பணம் பறிப்பு
பெரியண்ணன்: காகாபாளையம் ரயில்வே கேட் முதல், வேம்படிதாளம் ரயில்வே பாலம் வரை நடக்கும் வேம்படிதாளம் செவ்வாய் சந்தையில், ஒரு தேங்காய்க்கு, 1 ரூபாய் சுங்கம் வசூலிக்கின்றனர். ஒரு கடைக்கு, 50 முதல், 400 ரூபாய் வரை மிரட்டி பறிக்கின்றனர். தட்டிக்கேட்டால் கடை வைக்கக்கூடாது என விரட்டி அடிக்கின்றனர். வசூலிக்கும் பணத்துக்கு ரசீது கிடையாது. சுங்க கட்டண விபரம் அடங்கிய தகவல் பலகை இல்லை. வாரந்தோறும் விவசாயிகள், வியாபாரிகளை மிரட்டி, முறைகேடாக லட்சக்கணக்கில் நடக்கும் வசூலை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
செல்வராஜ்: நத்தக்கரையில் மின்மாற்றி பழுதாகி ஒரு மாதமாகியும் சரி செய்யவில்லை. அதற்கு விவசாயிகளிடம், 30,000 ரூபாய் வசூலித்த பிறகும் நடவடிக்கை இல்லை. அதற்கு எதிராக குரல் கொடுத்ததால், மற்றொரு மின்மாற்றியில் இருந்து, ஒருநாள் விட்டு ஒருநாள் மின்சாரம் வழங்குவதால், 1,000 ஏக்கரில் விளைநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. உடனே மின்மாற்றி பழுதை சரிபார்க்க வேண்டும்.
நீர்வளத்துறை அலட்சியம்
சந்திரன்: ஏற்காடு மலையில் உற்பத்தியாகும் மழைநீர், குரும்பப்பட்டி வழியே வந்து, அதை சுற்றியுள்ள விளைநிலங்களில் தேங்கி, அதன் கரைகளை அடிக்கடி சேதப்படுத்துவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மழைநீரை தடுக்க, குரும்பப்பட்டி ஓடையின் சேதமான கரைகளை புதுப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக பலமுறை முறையிட்டும் நீர்வளத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.
பெரியண்ணன்: ஊனத்துார் பால் கூட்டுறவு சங்கத்தில், 2019 - 20ல் நடந்த தணிக்கையில், 'சாம்பல்' பாலை விற்று, 6.86 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை, 5 ஆண்டாக கண்டுகொள்ளாத அதிகாரிகள், கடந்த மே, 28ல் சங்க செயலர் மாணிக்கம், அளவையாளர்கள் கிருஷ்ணன், தேவேந்திரன் ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்துள்ளனர். அதற்கு துணைபோன அதிகாரிகள் மீதும் நடவடிக்கை தேவை.
இன்னும் நிறைய முறைகேடு நடந்துள்ளதால், 2020க்கு முன் உள்ள கணக்குகளையும் மறுதணிக்கை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.