ADDED : ஆக 08, 2025 01:49 AM
சேலம், தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள், அலுவலர்கள், அதிகாரிகள் சங்கங்கள் சார்பில், சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள, தமிழ்நாடு கிராம வங்கி தலைமை அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கிராம வங்கி அலுவலர் சங்கத்தலைவர் ஆண்டோ தலைமை வகித்தார். அதில், தமிழ்நாடு கிராம வங்கி பங்குகளை தனியாருக்கும் விற்கும் முடிவை கைவிட வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
அகில இந்திய தலைவர் அஸ்வத் பேசுகையில், ''கிராம வங்கிகளில், 40 கோடி வாடிக்கையாளர் மூலம், 12 லட்சம் கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடக்கிறது.
இந்த வங்கிகளின் பங்குகளை, மத்திய அரசு தனியாருக்கு விற்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது. இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது,'' என்றார்.
கிராம வங்கி அலுவலர் சங்க செயலர் அறிவுடைநம்பி, அதிகாரிகள் சங்க செயலர் மெய்ஞானசேகர், இந்திய வங்கி ஊழியர் சங்க பொருளாளர் லட்சுமி நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
