/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அதிகாரி வீட்டில் திருடிய கொத்தனார் சிக்கினார்; 42 பவுன் நகைகள் மீட்பு
/
அதிகாரி வீட்டில் திருடிய கொத்தனார் சிக்கினார்; 42 பவுன் நகைகள் மீட்பு
அதிகாரி வீட்டில் திருடிய கொத்தனார் சிக்கினார்; 42 பவுன் நகைகள் மீட்பு
அதிகாரி வீட்டில் திருடிய கொத்தனார் சிக்கினார்; 42 பவுன் நகைகள் மீட்பு
ADDED : செப் 15, 2025 01:03 AM
சேலம்:சேலத்தில் அரசு அதிகாரி வீட்டில் திருடிய, கிருஷ்ணகிரி கொத்தனாரை கைது செய்த போலீசார், 42 பவுன் நகைகளை மீட்டனர்.
சேலம், 5 ரோடு அருகே, மாவட்ட தொழில் மைய இணை இயக்குனராக இருப்பவர் சிவக்குமார், 58. சூரமங்கலம், நரசோதிப்பட்டி என்.கே.என்., நகரில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
கடந்த, 10ல் வீட்டை பூட்டி விட்டு தர்மபுரி சென்ற அவர், மறுநாள் மாலை வந்தபோது, 56 பவுன் நகைகள், 10,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. சூரமங்கலம் போலீசார், 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்ததில், நள்ளிரவில் ஒருவர், வீட்டுக்குள் வந்து சென்றது தெரிந்தது.
இந்நிலையில் நேற்று, சேலம் ஏ.வி.ஆர்., ரவுண்டானா சந்திப்பில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, ஒருவரை பிடித்து விசாரித்ததில், முன்னுக்குபின் முரணாக பேசினார்.
இதனால் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரித்ததில், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த திம்மாபுரம், புல்காண்டியூரை சேர்ந்த, கொத்தனார் தர்மன், 45, என்பதும், இணை இயக்குனர் வீட்டில் திருடியதும் தெரிந்தது.
தொடர்ந்து வாக்குமூலப்படி, அவர் வீட்டின் பின்புறம் சென்ற போலீசார், அங்கு குழி தோண்டி புதைத்து வைத்திருந்த, 42 பவுன் நகைகளை மீட்டனர். 10,000 ரூபாயை செலவழித்து விட்டதாக, கொத்தனார் தெரிவித்தார்.
அதேநேரம் மீதி நகைகள் குறித்து, விசாரணை நடக்கிறது. இதுதவிர, ஏற்கனவே சூரமங்கலத்தில் திருடிய, 20 கிராமில், 2 வெள்ளி காசுகளை, போலீசார் மீட்டனர். இவர் மீது, மதுரை, கர்நாடகாவிலும் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரிந்தது. போலீசார் தர்மனை கைது செய்தனர்.