அ.தி.மு.க., ஆட்சி மலர்ந்ததும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: இ.பி.எஸ்.,
அ.தி.மு.க., ஆட்சி மலர்ந்ததும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: இ.பி.எஸ்.,
ADDED : ஏப் 07, 2026 02:41 AM
ஆத்துார், ''அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., பேசினார்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து நேற்று வீரகனுாரில், அக்கட்சி பொதுச் செயலர் இ.பி.எஸ்., பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில், கெங்கவல்லி தொகுதியில் முதன் முதலாக பிரசாரம் துவக்கியுள்ளேன். மக்கள் விரும்பும் கூட்டணியை, அ.தி.மு.க., அமைத்துள்ளது. தமிழர்களின் பண்பாடு, பொறுப்பு கிடைக்கும்போது, ஆசி பெறுவது தவறா? திருமணம் முடிந்ததும், பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறோம். இவை, உயர்ந்த பண்புள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும். பண்பு இல்லாத குடும்பத்தில் பிறந்த உதயநிதிக்கு தெரிய வாய்ப்பில்லை.
உதயநிதி எவ்வளவு ஆணவமாக பேசி வருகிறார். எம்.ஜி.ஆர்., பாடலில் பதவி வரும்போது பணிவு வரவேண்டும் தோழா... என்றார். துணை முதல்வர் உதயநிதி அப்படி இல்லை. 52 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் நான் யாரையும் தரக்குறைவாக பேசியதில்லை. என்னை தரக்குறைவாக பேசினால் விடமாட்டோம்; தொண்டர்களும் விடமாட்டார்கள்.
யார், யார் மீதெல்லாம் வழக்கு போட முயற்சித்தீர்கள். எங்கள் மீது வழக்கு போட முடிந்ததா? விவசாயியாக இருந்து, இந்த பதவிக்கு வந்துள்ளேன். உங்களது தந்தை, தாத்தா மூலம் உங்களுக்கு பதவி கிடைத்துள்ளது. சென்னையில், யாருக்காக பல கோடி ரூபாயில் கார் பந்தயம் நடத்தினீர்கள். உதயநிதிக்கு நாவடக்கம் தேவை. ஊரக வேலை திட்டத்திற்கு பணம் இல்லை; ஆனால், கார் பந்தயம் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது.
கெங்கவல்லி தொகுதியில், வேறு கட்சி வேட்பாளராக போட்டியிடும் நபர், போலி ஆவணத்தில் நிலத்தை பதிவு செய்துள்ளார். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு தொகுதியில், நீரேற்றும் திட்டம் மூலம் காவிரி உபரி நீர் கொண்டு வரப்படும். இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சி வந்ததும், ஜாதிவாரி கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படும்.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி, எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. இந்த தேர்தலில் கூப்பன் தருவதாக கூறி, அதன் மூலம் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியவை அனைத்தும் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அ.தி.மு.க., சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன், பா.ம.க., கிழக்கு மாவட்ட செயலர் ஜெயபிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டர்.
