ADDED : ஜூன் 04, 2025 01:37 AM
சேலம் :முதல்வர் ஸ்டாலின், அரசு முறை பயணமாக, சேலம் வர உள்ளார். விமானம் மூலம், வரும், 11 மாலை, சேலம் வரும் அவர், இரவு மேட்டூரில் தங்குகிறார். மறுநாள் காலை, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்க உள்ளார்.
பின் இரும்பாலை அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் நடக்கும் விழாவில், லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். அதில், 1,500 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், புது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புது அறிவிப்புகளை வெளியிட்டு பேச உள்ளார்.
இதனால் விழா பகுதியில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகளை, அமைச்சர் ராஜேந்திரன் நேற்று ஆய்வு செய்து, அதுதொடர்புடைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் உடனிருந்தனர்.
மேட்டூரில், நீர்வளத்துறை ஆய்வு மாளிகையில் முதல்வர் தங்க உள்ளார். அதற்கு, ஆய்வு மாளிகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை, அமைச்சர் ராஜேந்திரன், சேலம் எம்.பி., செல்வகணபதி ஆய்வு செய்தனர்.