/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இடிந்து விழுந்த வீடு: தப்பிய தாய், மகள்
/
இடிந்து விழுந்த வீடு: தப்பிய தாய், மகள்
ADDED : டிச 18, 2024 07:12 AM
கெங்கவல்லி: சமையல் செய்தபோது வீட்டின் மேற்கூரை, சுவர்கள் இடிந்து விழுந்த நிலையில், தாய், மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர், 38. கூலித்தொழிலாளியான இவர், சென்னைக்கு வேலைக்கு சென்றுள்ளார். இவரது மனைவி கவிதா, 30, அவரது தாய் பச்சையம்மாள், 62, குழந்தைகள் தர்ஷினி, 10, பிரதாப், 6, ஆகியோர், ஓட்டு வில்லை வீட்டில் வசிக்கின்றனர்.
குழந்தைகள் பள்ளி சென்ற நிலையில், நேற்று காலை, 10:30 மணிக்கு கவிதா, வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது வீட்டின் மேற்பகுதியில் சத்தம் கேட்க, கவிதா, பச்சையம்மாள், வீட்டில் இருந்து வெளியேறினர். சில நிமிடத்தில் மேற்கூரை, ஓடுகள், 3 பக்க சுவர்கள் இடிந்து விழுந்தன.
காஸ் சிலிண்டர் இருந்ததால், காலை, 10:50 மணிக்கு கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். 11:00 மணிக்கு வந்த வீரர்கள், சிலிண்டரை பாதுகாப்பாக மீட்டனர். இருப்பினும் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.
இதுகுறித்து கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''பச்சையம்மாள் வீடு, சமீபத்தில் பெய்த மழையின்போது சுவரில் ஈரப்பதம் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த இருவரும் வெளியே வந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. முழு அளவில் வீடு சேதம் அடைந்ததால் நிவாரணத்தொகை வழங்குவது தொடர்பாக, கலெக்டருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.