/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விசைத்தறி தொழிற்கூடங்களுக்கு வணிக வரி அளவீடு; மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு
/
விசைத்தறி தொழிற்கூடங்களுக்கு வணிக வரி அளவீடு; மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு
விசைத்தறி தொழிற்கூடங்களுக்கு வணிக வரி அளவீடு; மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு
விசைத்தறி தொழிற்கூடங்களுக்கு வணிக வரி அளவீடு; மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு
ADDED : நவ 27, 2024 06:44 AM
சேலம்: விசைத்தறி தொழிற்கூடங்களுக்கு அளவீடு செய்து வணிக வரி விதிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி கூட்டத்தில் இருந்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் இயல்பு கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, மேயர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அதில் கவுன்சிலர்கள் பேசியதாவது: 52வது வார்டு அசோகன்(தி.மு.க.,): கொண்டலாம்பட்டி மண்டலத்தில், 50,473 இடங்களுக்கு, 26 கோடி ரூபாய் தான் வசூலிக்கப்படுகின்றன. ஆனால் புதிதாக அளவீடு செய்யப்பட்ட, 277 'அசெஸ்மென்ட்'களுக்கு, 7 கோடி வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஊழல் நடக்கிறது. பல இடங்களுக்கு வரி இல்லாமலும், சில இடங்களுக்கு பல மடங்கு கூடுதல் வரியும் நிர்ணயிக்கப்படுகிறது.
கமிஷனர் ரஞ்ஜீத்சிங்: வரி விதிப்பு குறித்து திருத்தப்பட்ட அரசாணைப்படி அளவீடு செய்யப்படுகிறது. தவறாக இருந்தால், 'அப்பீல்' செய்து சரிசெய்து கொள்ளலாம். இதுகுறித்து கவுன்சிலர்களிடம் விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும். 9வது வார்டு தெய்வலிங்கம்(தி.மு.க.,): அம்மாபேட்டை மின் மயானம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். பழைய பஸ் ஸ்டாண்டில் கழிவுநீர் வெளியேற வழியின்றி, கடைகளை வாடகைக்கு எடுத்தவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். பல கடைகள் பூட்டியே கிடக்கின்றன. மறுசீரமைக்கப்படும் தார்ச்சாலைகளின் தரம் மோசமாக உள்ளது.
57வது வார்டு சீனிவாசன்(தி.மு.க.,): என் வார்டில், 90 சதவீத விசைத்தறி தொழில். அதற்கு அளவீடு செய்து வணிக வரியாகவும், தொழில் வரியும் கட்ட சொல்வதால் மக்கள் இடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
36வது வார்டு யாதவமூர்த்தி(அ.தி.மு.க.,): கூட்ட, 'அஜண்டா'வை படித்து பார்க்க கூட அவகாசம் தருவதில்லை. அவசரமாக இயற்றப்பட்ட வரி உயர்வால்தான், தற்போது, தி.மு.க., கவுன்சிலர்களே கதறும் நிலை ஏற்பட்டுள்ளது. விசைத்தறி கூடங்களை அளவீடு செய்து வணிக வரி, தொழில் வரி வசூலிக்கும் நடவடிக்கையை நிறுத்திக்கொள்ள வேண்டும். வரி வசூல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கைத்தறி துறை அமைச்சர் மூர்த்தியின் வெற்று அறிக்கையை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம். இதையடுத்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள், 7 பேரும் வெளிநடப்பு செய்தனர்.
33வது வார்டு ஜெயஸ்ரீ(தி.மு.க.,): காலி மனை நிலங்களில் குப்பை கொட்டப்பட்டும், மழைநீர் தேங்கியும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. உரிமையாளர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி சுத்தம் செய்ய கூற வேண்டும் அல்லது மாநகராட்சியே சுத்தம் செய்து அபராதத்தை வசூலிக்க வேண்டும். பெரும்பாலான சாலைகளில் கார்களை நிறுத்தி வைத்துக்கொள்கின்றனர். அவசரத்துக்கு பெரிய வாகனங்கள் செல்ல முடியவில்லை. சாலை, தெருக்களில், கார்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும். பின், ஆளுங்கட்சி தலைவர் தமிழ்செல்வன், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படுவதாக கூறியதையடுத்து கூட்டம் நிறைவு பெற்றது.