ADDED : டிச 25, 2024 02:10 AM
சேலம், டிச. 25-
அம்பேத்கரை அவதுாறாக பேசியதாக கூறி, மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலகவும், மக்களிடம் மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தி, காங்., சார்பில் சேலத்தில் நேற்று ஊர்வலம் நடந்தது. மாநகர் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார்.
மாவட்ட மைய நுாலகம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, ஊர்வலமாக புறப்பட்டவர்கள், கலெக்டர் அலுவலக நுழைவாயிலை அடைந்தனர்.
பின், ஜனாதிபதி முகவரியிட்ட மனுவை வழங்க, கலெக்டர் அலுவலகத்துக்குள், அனைவரும் ஒருசேர நுழைய முயன்றனர். அவர்களை, பாதுகாப்பு பணி போலீசார் தடுத்து நிறுத்தியதால், போலீசாருடன் தள்ளுமுள்ளு நடந்தது.
அத்துடன், இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆவேசமடைந்த காங்., கட்சியினர், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு, எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பின், மனு கொடுக்க குறிப்பிட்ட நிர்வாகிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டதும், போராட்டம் முடிவுக்கு வந்தது. இதில் கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி, மேற்கு மாவட்ட தலைவர் ஜெயகுமார், துணை மேயர் சாரதாதேவி, மாநகர் பொருளாளர் ராஜகணபதி உள்பட பலர் பங்கேற்றனர்.