ADDED : நவ 27, 2024 06:43 AM
சேலம்: சேலம் அரசு சட்ட கல்லுாரியில் அரசியலமைப்பு தின விழா சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. அதில் கல்லுாரி முதல்வர் ராமபிரான் ரஞ்சித்சிங் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் அய்யப்பமணி, அரசியலமைப்பின் முக்கியத்துவம், மாணவர்கள் தொடர்ந்து கற்க வேண்டியதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து பேசினார். தொடர்ந்து மாணவர்கள், ஆசிரியர்கள், அரசியலமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 'அடிப்படை கடமைகள்' தலைப்பில், கட்டுரை போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. பேராசிரியர்கள் சுபாஷினி, மீனாட்சிசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.
துண்டறிக்கை
அதேபோல் சேலம் வக்கீல் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அரசியலமைப்பு தின விழா கொண்டாடப்பட்டது. அதில் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி, அரசியலமைப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார். தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் அய்யப்பமணி, வக்கீல் சங்கத்தலைவர் விவேகானந்தன், செயலர் நரேஷ்பாபு, நீதிபதிகள், வக்கீல்கள் பங்கேற்றனர்.
மேட்டூர் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துண்டறிக்கை வினியோகிக்கப்பட்டது. தொடர்ந்து அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடந்தது. மாவட்ட கூடுதல் நீதிபதி உதயவேலவன், சார்பு நீதிபதி கமலகண்ணன், உரிமையியல் நீதிபதி மணிவர்மன், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் பத்மபிரியா, மயில்சாமி, வக்கீல்கள் பங்கேற்றனர்.
உறுதிமொழி ஏற்பு
தலைவாசல் அருகே புத்துார் அரசு தொடக்கப்பள்ளியில் இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் முருகவேள் தலைமையில் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், 'இந்த நாளில் அரசியல் அமைப்பு சட்டப்படி செயல்படுவோம்' என, உறுதிமொழி ஏற்றனர். அதேபோல் ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.