/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மழைக்கால உபகரணங்கள் கேட்டு ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் தர்ணா
/
மழைக்கால உபகரணங்கள் கேட்டு ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் தர்ணா
மழைக்கால உபகரணங்கள் கேட்டு ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் தர்ணா
மழைக்கால உபகரணங்கள் கேட்டு ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் தர்ணா
ADDED : அக் 16, 2024 07:01 AM
ஆத்துார்: மழைக்கால உபகரணங்கள் கேட்டு ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஆத்துார் நகராட்சியில், 70 துாய்மை பணியாளர்கள், 117 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் மூலம் சுகாதார பணி மேற்கொள்ளப்படுகிறது. நேற்று முன்தினம் குப்பை அள்ளும் வாகனத்துக்கு, 'சார்ஜ்' போட்டபோது, ஒப்பந்த துாய்மை பணியாளர் ஸ்ரீதர், 32, மீது மின்சாரம் பாய்ந்ததில் படுகாயம் அடைந்து, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை, 6:00 மணிக்கு மழைக்கால உபகரணங்கள் வழங்குதல், பேட்டரி வாகனங்களை சரிசெய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பணியை புறக்கணித்து, காங்., கவுன்சிலர் தேவேந்திரன் தலைமையில், நகராட்சி அலுவலகம் முன், ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். காலை, 9:00 மணிக்கு நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபாகமால் காரில் வந்த நிலையில், வழிவிட மறுத்துவிட்டனர். கமிஷனர், 'காலை, 11:00 மணிக்கு ஒப்பந்த நிறுவனத்தினரை வர அறிவுறுத்தி உள்ளோம். தற்போது, 'மீட்டிங்' செல்வதால் வழிவிடுங்கள். இல்லை எனில் புகார் அளிக்கப்படும்' என்றார். அதற்கு தேவேந்திரன், 'என் மீது புகார் கொடுங்கள்' என கூறினார். பின், 20 நிமிடம் கழித்து, கமிஷனர் செல்ல அனுமதித்தனர்.
மேற்பார்வையாளர்இதை அறிந்து அங்கு வந்த, அ.தி.மு.க.,வின், ஆத்துார் தொகுதி, எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், துாய்மை பணியாளர்களிடம் குறைகளை கேட்டார். அப்போது, 'ரெயின்கோட், கையுறை வழங்கவில்லை. மேற்பார்வையாளர் இருவர், பெண் பணியாளரை ஒருமையிலும் தகாத முறையிலும் பேசுகின்றனர்' என்றனர்.அதற்கு எம்.எல்.ஏ., 'உபகரணங்களை அதிகாரிகளிடம் பேசி பெற்றுத்தருகிறோம்' என்றார். அப்போது வந்த, ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினியிடம், துாய்மை பணியாளர்கள் புகார் மனு அளித்தனர். உடனே தனியார் ஒப்பந்த நிறுவன அலுவலர்களை அழைத்து பேசிய ஆர்.டி.ஓ., 'குப்பை அள்ளுவதால் இழிவாக பேசுவீர்களா?' என கேட்டார். தொடர்ந்து இதுகுறித்து, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், பேச்சு நடத்தி தீர்வு காணப்படும்' என்றார்.பின் தனியார் நிறுவனத்தினர், 'மேற்பார்வையாளர்கள் நீக்கப்படுவர். உபகரணங்கள் வழங்கப்படும்' என்றனர். இதனால் காலை, 11:50 மணிக்கு துாய்மை பணியாளர்கள் தர்ணாவை கைவிட்டு, பணிக்கு சென்றனர்.