/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கடைக்கு கருணாநிதி பெயர் வைக்க எதிர்ப்பு நகராட்சி தலைவரை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்
/
கடைக்கு கருணாநிதி பெயர் வைக்க எதிர்ப்பு நகராட்சி தலைவரை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்
கடைக்கு கருணாநிதி பெயர் வைக்க எதிர்ப்பு நகராட்சி தலைவரை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்
கடைக்கு கருணாநிதி பெயர் வைக்க எதிர்ப்பு நகராட்சி தலைவரை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்
ADDED : செப் 26, 2025 02:01 AM
இடைப்பாடி, பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்ட கடைகளுக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க.,வின் நகராட்சி தலைவர் மற்றும் கமிஷனரை, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் முற்றுகையிட்டனர்.
இடைப்பாடி நகராட்சி கவுன்சிலர் கூட்டம், தி.மு.க.,வை சேர்ந்த தலைவர் பாஷா தலைமையில் நடந்தது. அதில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
முருகன் (அ.தி.மு.க.,): நகராட்சியில் தினமும், 8 டன் மட்டும் குப்பை வருகிறது. ஆனால், 14 டன் வரை பில் போடப்படுகிறது. தவிர தெரு விளக்குகள் அடிக்கடி பீஸ் போகிறது. ஒப்பந்தம் எடுத்தவர் சரிசெய்யவில்லை. சம்பளம் தராததால், வேலை செய்யாமல் ஓடிவிட்டார்.
தலைவர் பாஷா: அப்படி பில் போடப்படவில்லை.
கமிஷனர் கோபிநாத்: என் சொந்த பணத்தில் அவர்களுக்கு சம்பளம் கொடுத்துள்ளேன். எல்.இ.டி., பல்பு பொருத்த, ஒப்பந்தம் எடுத்த கான்ட்ராக்டர், வேலை செய்யாமல் சென்றுவிட்டார். அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, வேறு நபரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நிலையில், தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ள வார்டுகளுக்கு மட்டும் அடிப்படை வசதிகள் செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, தலைவர் பாஷா, கமிஷனர் கோபிநாத்தை, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் முற்றுகையிட்டனர். அப்போது நகராட்சி பஸ் ஸ்டாண்டில், புதிதாக கட்டப்பட்ட கடைகளின் முதல் தளத்துக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைக்க, தீர்மானம் இருந்ததால், அதற்கும், அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அத்தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என, பாஷா கூற, முருகன் தலைமையில், ரவி உள்பட, 13 அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து, கருணாநிதி பெயர் வைத்தல் உள்பட, 59 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக, பாஷா தெரிவித்த பின் கூட்டம் முடிந்தது.
வெளிநடப்பு குறித்து முருகன் கூறுகையில், ''நகராட்சியில் ஏற்கனவே, இரு சமுதாய தலைவர்கள் பெயர்கள் தான் இருந்தன. தற்போது கருணாநிதி பெயரை வைப்போம் என தீர்மானம் கொண்டு வந்ததை ஏற்க முடியாது. அதை கண்டித்தும், தி.மு.க.,வினர் அதிகளவில் முறைகேடு செய்து வருவதை கண்டித்தும் வெளிநடப்பு செய்தோம்,'' என்றார்.
மனை பிரிவு தீர்மானத்தை நிறுத்த கோரிக்கை
தாரமங்கலம் நகராட்சி கவுன்சிலர் கூட்டம், தி.மு.க.,வை சேர்ந்த, தலைவர் குணசேகரன் தலைமையில் நடந்தது. அதில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
பா.ம.க., தனபால்: 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடக்கும்போது, நகாரட்சி அலுவலகத்தில் பணியாளர்கள் இல்லாததால், இங்கு வரும் மக்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். வார்டு, 23ல் மனை பிரிவுகள் அமைக்க அனுமதி கேட்டு, பொருள்: 27ல் தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது. வீட்டு மனை அனுமதிக்கு இணைப்பு சாலை, 7.2 மீ., இருக்க வேண்டும். அங்கு, 4.5 மீ., சாலை உள்ளதோடு, குடிநீர் வசதி இல்லை. கால்வாய் பணியும் முடியாததால், மனை பிரிவு நிறுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இத்தீர்மானத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.
பா.ம.க., குமரேசன்: வார்டில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுகிறது. அங்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர்ந்து, 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கமிஷனர் பாலமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.