/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாவட்டத்தில் 'டாக்பியா' வேலை நிறுத்தம்
/
மாவட்டத்தில் 'டாக்பியா' வேலை நிறுத்தம்
ADDED : அக் 22, 2024 01:19 AM
சேலம், அக். 22-
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் (டாக்பியா) சார்பில், மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது.
தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களிடம் இருமடங்கு அபராதம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற பொருட்கள் விற்பனை இலக்கை கைவிட வேண்டும். ரேஷன் விற்பனையாளர்களை, ஒன்றிய அளவிலேயே இடமாற்றம் செய்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக முதல்வர் கவனத்தை ஈர்க்க, மாநில அளவில் வேலை நிறுத்தம் செய்தனர். அதன்படி சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள, 205 கடன் சங்கங்களில், 67 சங்கங்கள் மட்டுமே, நேற்று வழக்கம் போல செயல்பட்டன. மீதமுள்ள 138 சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் அச்சங்கங்கள் திறக்கப்படவில்லை. இது, 67 சதவீதம்.
அதேபோல, சங்க கட்டுப்பாட்டில் உள்ள, 1,737 ரேஷன் கடைகளில், சுழற்சி அடிப்படை யில், 1,071 கடைகள் செயல்பட வேண்டும். அதில், 725 ரேஷன் கடைகள் வழக்கம் போல திறக்கப்பட்டு பொருட்கள் வினியோகம் நடந்தது. இது, 67.7 சதவீதம். 346 கடைகள் மூடப்பட்டு கிடந்தன. அதனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையா அனுப்பிய சுற்றறிக்கையில், வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் ரேஷன் பணியாளர்களுக்கு, நோ ஒர்க்; நோ பே என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்யும்படி, அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என, கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சங்க மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் கூறுகையில், ''சங்க செயலாட்சியரிடம் முன்னதாக விடுப்பு கடிதம் கொடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.