/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மண் அரிப்பை தடுக்க சுவர் கட்ட கோரிக்கை
/
மண் அரிப்பை தடுக்க சுவர் கட்ட கோரிக்கை
ADDED : ஆக 22, 2024 03:49 AM
ஓமலுார்: மேற்க சரபங்கா ஆற்று கரைகளில் மண் அரிப்பால், கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்காடு மலை அடிவாரப்பகுதியான உள்கோம்பையில் மேற்கு சரபங்கா ஆறு உருவாகிறது. அதில் ஏற்காட்டில் மழை பெய்யும்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காடையாம்பட்டி தாலுகாவின் டேனிஷ்பேட்டை, கோட்டைகுள்ளமுடையான் என அடுத்தடுத்து பல ஏரிகளுக்கு நீர் வரத்து இருக்கும். சரபங்கா ஆற்றை ஒட்டி பல ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது. பலத்த மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது விளைநிலங்களில் புகுந்து சேதப்படுத்துவதை தடுக்கும்படி, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், உள்கோம்பையில் இருந்து ஆறு வளைந்து செல்லும் பகுதியில் மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்க, பல இடங்களில் ஆங்காங்கே கான்கிரீட் தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த, 18ல் பலத்த மழையால் மேற்கு சரபங்காவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல இடங்களில் கரையோரங்களில், 3 மீ.,க்கு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முள்ளங்கல் முனியப்பன் கோவில் அருகே மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சரபங்கா ஆற்றை ஆய்வு செய்து மண் அரிப்பை தடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி பெருமாள் கூறுகையில், ''மண் அரிப்பு குறித்து பொதுப்பணித்துறையினரிடம் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டது. கான்கிரீட் தடுப்புச்சுவர் அல்லாத பல இடங்களில் தற்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மேலும் மண் அரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது. அப்பகுதிகளை ஆய்வு செய்து தடுப்புச்சுவர்களை கட்ட வேண்டும்,'' என்றார்.