கோகுலம் மருத்துவமனை 25வதுஆண்டு விழா அக்.,23ல் துவக்கம்
கோகுலம் மருத்துவமனை 25வதுஆண்டு விழா அக்.,23ல் துவக்கம்
ADDED : அக் 21, 2012 06:04 AM
சேலம்: சேலம் கோகுலம் மருத்துவமனையின், வெள்ளிவிழா ஆண்டு, அக்டோபர், 23ம் தேதி துவங்குகிறது.இதுகுறித்து கோகுலம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அர்த்தநாரி நிருபர்களிடம் கூறியதாவது:கோகுலம் மருத்துவமனை, அக்டோபர், 23ம் தேதி, தன், 25ம் ஆண்டில் காலடி வைக்கிறது. மருத்துவத்துறையில், 25 ஆண்டுகால சேவை நீண்ட பயணமாகவே இருந்துள்ளது. முதல் மைல்கல்லாக வெள்ளி விழா கொண்டாட உள்ளோம். மருத்துவமனை துவங்கும் முன், சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் முன்னேற்றம் இல்லாத பின்தங்கிய பகுதியாகவே இருந்தது.
அதிலும் குறிப்பாக மருத்துவத்துறையில் நவீன வசதிக்கும், சிகிச்சைக்கும், கோவை அல்லது வேலூர் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. அதை தவிர்க்கும் வகையில், சேலத்திலேயே நவீன வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், 1988ம் ஆண்டில், சிறிய முதலீட்டில் கோகுலம் மருத்துவமனை துவங்கப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் சிறிது சிறிதாக முன்னேறி, தற்போது இந்த நிலையை அடைந்துள்ளோம். வரும் நோயாளிகளுக்கு பெட் வசதி இல்லாததால், கோகுலம் மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அத்துடன் சிறப்பு மருத்துவ வசதிகளையும் ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்டதுதான், கோகுலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.தற்போது, 320 படுக்கை வசதியுடன், ஏழு ஐ.சி.யு., வார்டுகளில், 72 படுக்கை வசதியும், பத்து ஆப்ரேஷன் தியேட்டர்களுடன் இயங்கி வருகிறது. வரும், 2015ம் ஆண்டுக்குள், 500 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இருதய சிகிச்சை பிரிவு, ஆர்த்தோ, சிறுநீரக சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அனைத்து துறைகளும் உள்ளன. இதில், முழு நேர சிறப்பு சிகிச்சை நிபுணர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.கோகுலம் நர்ஸிங் கல்லூரி மூலம் மருத்துவம் சார்ந்த படிப்புகளும் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளிவிழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வேளையில், உடன் இருந்த டாக்டர்கள், உதவி செய்தவர்கள், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.இவ்வாறு அவர் பேசினார்.
