இன்ஸ்பெக்டர் மீது இடைப்பாடி தி.மு.க., வேட்பாளர் புகார்
இன்ஸ்பெக்டர் மீது இடைப்பாடி தி.மு.க., வேட்பாளர் புகார்
ADDED : ஏப் 07, 2026 02:17 AM
இடைப்பாடி, இடைப்பாடி தொகுதியில், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த, தி.மு.க., வேட்பாளரை தடுத்ததாக கொங்கணாபுரம் இன்ஸ்பெக்டர் மீது, புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 23ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சேலம் மாவட்டம், இடைப்பாடி தொகுதியில் தேர்தல் அலுவலராக இருப்பவர் நடராஜன். வேட்புமனுவின் கடைசி நாளான நேற்று இடைப்பாடியில், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., தி.மு.க., வேட்பாளர் காசி உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் நேற்று மனுதாக்கல் செய்தனர். அனைத்து கட்சியினருக்கும் தனித்தனியே நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. நேற்று மனுதாக்கல் அறைக்கு முன்பாக, கொங்கணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா பாதுகாப்பு பணியில் இருந்தார்.
இந்நிலையில், தி.மு.க., வேட்பாளர் காசி, தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜனிடம் கொடுத்த புகாரில், 'நான் மனுதாக்கல் செய்ய நேற்று மதியம் 12:05 மணிக்கு வந்துவிட்டேன். என்னை மனுதாக்கல் செய்ய அனுமதிக்காமல், 12:30 மணிக்கு வந்த அ.தி.மு.க., வேட்பாளரை மனுதாக்கல் செய்ய அனுமதித்து, ஒரு சார்பாக நடந்து கொண்டார். எனவே, ஒரு தரப்பிற்கு சாதகமாக நடந்து கொண்ட கொங்கணாபுரம் இன்ஸ்பெக்டர் ராதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.
