ADDED : நவ 14, 2024 07:47 AM
சேலம்: சென்னை, கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைத்துறை தலைவர் பாலாஜியை கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், மருத்துவர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டித்து சேலம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நேற்று மதியம், 1:00 மணிக்கு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து அரசு மருத்துவர் சங்க கூட்டமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். அதில் குற்றவாளிகளை கைது செய்ய கோஷம் எழுப்பினர். மருத்துவர்கள்,
பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இதுகுறித்து செந்தில்குமார் கூறுகையில், ''மருத்துவர் பாலாஜி மீதான கத்திக்குத்து சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட
குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்,'' என்றார்.