/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மழையால் 2 வீட்டின் சுவர் இடிந்து சேதம்
/
மழையால் 2 வீட்டின் சுவர் இடிந்து சேதம்
ADDED : அக் 16, 2024 07:01 AM

சேலம்: சேலத்தில் கடந்த, 3 நாட்களாக மழை பெய்து வருவதால் குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவுகிறது. இதனிடையே வங்கக்கடலில் உருவான புயலால் மழை வலுவடைந்துள்ளது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக ஓமலுாரில், 18 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.
அதேபோல் சங்ககிரி, 16.1, நத்தக்கரை, 15, மேட்டூர், 13.8, டேனிஷ்பேட்டை, 9.5, சேலம், 9.2, கரியகோவில், ஏற்காடு தலா, 9, கெங்கவல்லி, 8, இடைப்பாடி, 7.2, தம்மம்பட்டி, ஆணைமடுவு தலா, 7, வீரகனுார், 6, ஆத்துார், 4.8, ஏத்தாப்பூர், 4, வாழப்பாடியில், 1.5 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
சேலத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மித மழை, கனமழை என மாறி மாறி விட்டு விட்டு பெய்து வருகிறது. அதேபோல் மாவட்டம் முழுதும் பரவலாக மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.
உத்தமசோழபுரம், சூளைமேடு, அரியானுார், சீரகாபாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், சேலம் - கோவை 4 வழிச்சாலை, சர்வீஸ் சாலை ஓரங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகனங்கள் சீறிப்பாய்ந்து சென்றபோது, பக்கத்தில் செல்லும் வாகனங்களை மறைக்கும்படி மழைநீர் பீறிட்டு அடித்ததால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மேலும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அவதிப்பட்டனர்.
தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை:
மேட்டூர் பண்ணைபுரத்தில் லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான தகர வீட்டின் சுவர், மழைநீரால் ஊறி சேதமாகி இடிந்து வெளிபக்கமாக விழுந்தது. இதனால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. அதேபோல் அம்மாபேட்டை கிருஷ்ணாபுரத்தில் எல்லம்மாள் என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டின் சுவரும் மழையில் இடித்து விழுந்தது. மழையால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இது அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். மீறி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் பிருந்தாதேவி எச்சரித்துள்ளார்.
ஆனைமடுவு நீர்மட்டம் 'கிடுகிடு':
வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டையில், 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கும்படி ஆனைமடுவு அணை உள்ளது. கடந்தாண்டு போதிய மழையின்றி அணை நிரம்பவில்லை. நீர்வரத்தும் நின்றுபோனது. இதனால் சிறப்பு நினைப்பாக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு தண்ணீர் அடியோடு சரிந்தது. கடந்த ஏப்ரலில் ஆனைமடுவு அணை வறண்டு, 10 அடி உயரத்தில் மட்டும் தண்ணீர் இருந்தது.
கடந்த மே மாதம் பெய்த மழையால், 16.07 அடி உயர்ந்து, ஜூலை, 30ல், 26 அடி உயரத்தில் தண்ணீர் இருந்தது. இதையடுத்து ஆகஸ்ட், செப்டம்பரில் பெய்த தொடர் மழையால் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, 44 அடி உயரத்தில் தண்ணீர் தேங்கி இருந்தது. இந்நிலையில், 10 நாட்களாக பெய்த கன மழையால், நேற்று, 56.20 அடி உயரத்தில், 169 மில்லியன் கன அடி நீர் தேங்கி கடல் போல் காட்சியளிக்கிறது. அணை நீர்வரத்து, வினாடிக்கு, 35 கன அடியாக இருந்தது.
ஏற்காட்டில் பனிமூட்டம்:
ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதனால் சற்று துாரத்தில் வரும் வாகனங்கள் கூட தெரியாமல், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி மெதுவாக ஓட்டிச்சென்றனர். காலை முதல் மழையால், பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர், மழையில் நனைந்தபடியே சென்றனர். மாலையும் மழை பெய்ததால், மாணவர்கள் அவதிப்பட்டனர். குறிப்பாக பனி மூட்டம், மழையால் கடும் குளிரும் நிலவ, கூலி வேலைக்கு செல்லும் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கினர்.
சரபங்காவில் வெள்ளப்பெருக்கு 1,000 மணல் மூட்டைகள் தயார்:
ஏற்காடு மலைப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் ஓமலுார், சக்கரைசெட்டிப்பட்டி அருகே குறுமிச்சங்கரட்டில் உற்பத்தியாகும் கிழக்கு சரங்கா ஆற்றிலும், காடையாம்பட்டி தாலுகா டேனிஷ்பேட்டை உள்கோம்பையில் உற்பத்தியாகும் மேற்கு சரபங்கா ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
இதுகுறித்து ஓமலுார் நீர்வள பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் கூறுகையில், ''மழையால் கோட்டைகுள்ளமுடையான், பண்ணப்பட்டி ஏரிகள் நிரம்பின. கே.மோரூர் பெரிய சக்களச்சி ஏரி நிரம்பி வருகிறது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 1,000 மணல் மூட்டைகள், பல்வேறு இடங்களில் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மூங்கில் குச்சிகள், சாக்கு பைகள், பொக்லைன் இயந்திரங்கள் தயாராக உள்ளன. நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது,'' என்றார்.