ஜே.இ.இ., 'அட்வான்ஸ்டு' தேர்வுக்கு தகுதி; அரசு மாணவர்களுக்கு உறைவிட பயிற்சி
ஜே.இ.இ., 'அட்வான்ஸ்டு' தேர்வுக்கு தகுதி; அரசு மாணவர்களுக்கு உறைவிட பயிற்சி
ADDED : மார் 28, 2024 07:14 AM
சேலம் : ஜே.இ.இ., 'அட்வான்ஸ்டு' தேர்வுக்கு தகுதி பெற்றவர்களுக்கு, சென்னையில் உணவு வசதியுடன் தங்கி, பயிற்சி பெறலாம் என்பதால், அதில் பங்கேற்க உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவியரை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தொழில்நுட்ப நிறுவனங்களான, ஐ.ஐ.டி., என்.ஐ.டி., உள்ளிட்டவற்றில், ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி மாவட்டத்துக்கு, 1 வீதம், மாதிரி பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
இதில் பயிற்சி பெற்ற மாணவர்கள், கடந்த மாதம் நடந்த ஜே.இ.இ., மெயின் தேர்வில் பங்கேற்றனர். அவர்களில் ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுக்கு தகுதி பெற்றவர்களுக்கு, ஏப்., 1 முதல் மே, 23 வரை, உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி மாவட்டங்களில் தகுதி பெற்ற மாணவ, மாணவியரை, அவர்களது பெற்றோர் ஒப்புதல் பெற்று, மார்ச், 30க்குள், சென்னைக்கு அனுப்ப, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர்கள், பொறுப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
