/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எல்லாம் கணபதி; எங்கும் கணபதி... விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
/
எல்லாம் கணபதி; எங்கும் கணபதி... விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
எல்லாம் கணபதி; எங்கும் கணபதி... விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
எல்லாம் கணபதி; எங்கும் கணபதி... விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
ADDED : ஆக 28, 2025 01:45 AM
சேலம், சதுர்த்தி விழாவையொட்டி, 'எல்லாம் கணபதி, எங்கும் கணபதி'யாக சேலம் மாவட்டம் முழுதும் ஒவ்வொரு தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு, விளையாட்டு போட்டிகள் நடத்தி, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ்ந்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழா, சேலம், செவ்வாய்ப்பேட்டை வாசவி மகால் மண்டபத்தில், 'எலைட் அசோசியேஷன்' சார்பில், 45ம் ஆண்டாக கொண்டாடப்பட்டது. அங்கு பிரமாண்ட புலி மீது ஒரு கையில் வில், மறு கையில் அம்புடன் மணிகண்டன் அலங்காரத்தில் விநாயகரை எழுந்தருள செய்து பக்தர்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அங்குள்ள அப்புசெட்டி தெரு அரசமர விநாயகர் கோவிலில், 32ம் ஆண்டாக, குபேர, லட்சுமி கணபதி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதில் புத்தம் புதிதாக, 10, 20, 100, 200, 500 ரூபாய் நோட்டுகள், 100 மி., கிராம் தங்கம், 1 கிராம் வெள்ளி நாணயங்களால் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்காடு அடிவாரத்தில் உள்ள அறுபடைவீடு முருகன் கோவில் வளாகத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் பஞ்சமுக விநாயகர், வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தார். அய்யந்திருமாளிகை மாரியம்மன் கோவிலில் உள்ள விநாயகர், நவதானியங்களால் அருள்பாலித்தார். குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரி அம்மன் கோவில் அருகே, இந்து முன்னணி சார்பில் பிரமாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்பட்டது.
ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே வெள்ளப்பிள்ளையார் கோவிலில் சுவாமிக்கு, பால், தயிர், நெய், சந்தனம், தேன் உள்பட பல்வேறு அபிேஷக பூஜை செய்யப்பட்டது. பின், வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஆத்துார், ராணிப்பேட்டை செல்வ விநாயகர் கோவிலில் தசாவதார விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர். ஆத்துார், மாரிமுத்து சாலையில், விநாயகர் சிலை வைத்து, 100, 200 ரூபாய் நோட்டு மாலை அணிந்த அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
சிவனுக்கு பாலாபிஷேக அலங்காரம்
இந்து முன்னணி சார்பில், தாரமங்கலம், துட்டம்பட்டி பைபாஸில், விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர். மதியம், பூலாம்பட்டி காவிரி ஆற்றில் கரைக்க, நகர தலைவர் சீனிவாசன் தலைமையில் பலர், சிலையை ஆட்டோவில் வைத்து, தாரமங்கலம் வழியே சென்றனர்.
தாரமங்கலம், ஜலகண்டாபுரம் சாலையில் உள்ள ஆலடி விநாயகர் கோவிலில் சுவாமிக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சந்தனக்காப்பு, மோட்டார் மூலம் விநாயகர் கையில் இருந்த சங்கில், சிவனுக்கு பால் அபிஷேகம் செய்வது போன்று அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
ஓமலுார் போலீஸ் உட்கோட்ட சரக பகுதிகளில், 370க்கும் மேற்பட்ட பகுதிகளில் மக்கள், 40 இடங்களில் இந்து முன்னணி சார்பில் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. 250க்கும் மேற்பட்ட போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர். டேனிஷ்பேட்டை ஏரியில், வீடுகளில் வைக்கப்பட்ட சிறு விநாயகர் சிலைகளை பலர் கரைத்தனர். தவிர, மாநகர், மாவட்டம் முழுதும், அனைத்து வீதிகள், தெருக்கள், சந்துகள் உள்பட, 1,500க்கும் மேற்பட்ட இடங்களில், பல்வேறு வித பிள்ளையார் சிலைகளை வைத்து, மக்கள் விமரிசையாக கொண்டாடினர்.
இடைப்பாடி, கவுண்டம்பட்டி யோக கணபதி கோவிலில் உள்ள விநாயகர்
, சங்ககிரி, வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள மகாகணபதி ஆகியோருக்கு, சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வாழப்பாடி, மன்னாய்க்கன்பட்டி பிரிவு சாலை அருகே உள்ள பிங்கள விநாயகர், ரத்தின கற்கள், சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பனமரத்துப்பட்டி, சந்தைப்பேட்டையில், 12 அடி உயர சக்தி விநாயகர் சிலைக்கு, வண்ண பொடிகள் மூலம் அலங்காரம் செய்து, மலர் மாலை, அருகம்புல் சாத்தி, தீபாராதனை காட்டினர்.168 சிலைகள் பிரதிஷ்டை
ஆத்துார் நகரில் ராணிப்பேட்டை, விநாயகபுரம், புதுப்பேட்டை, முல்லைவாடி, மந்தைவெளி, ஜோதி நகர், நரசிங்கபுரம் என, 51 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அதேபோல் ஆத்துார் ஊரகம், 13, தலைவாசல், 26, வீரகனுார், 10, கெங்கவல்லி, 24, தம்மம்பட்டி, 35, மல்லியக்கரை, 9 என, 168 இடங்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
பொங்கல், கொழுக்கட்டைகளை படைத்து ஏராளமானோர் வழிபட்டனர். அதேபோல் ஏற்காட்டில், 28 சிலைகள் வைத்து மக்கள் வழிபட்டனர்.
கும்பாபிஷேகம்
தாரமங்கலம், தச்சங்காட்டூர் இலங்கை தமிழர் முகாமில் வினை தீர்க்கும் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காலை, 10:00 மணிக்கு மேல் யாகத்தில் வைத்து பூஜை செய்த புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்திவைத்தனர். ஏராளமான
பக்தர்கள் தரிசித்தனர். அவர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
தங்க கவசத்தில்
ராஜணபதி
சேலம் தேர்வீதி ராஜகணபதி கோவிலில் நேற்று காலை, 6:00 மணிக்கு சிறப்பு கணபதி யாகம் செய்து, அதில் வைத்து பூஜித்த புனிதநீர், பால், தயிர், இளநீர் உள்பட, 16 வகை மங்கல பொருட்களால் மூலவர் கணபதிக்கு அபி ேஷகம் செய்து தங்க கவசம் அணிவித்து மகா தீபாராதனையுடன் பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் குடும்பத்துடன் காத்திருந்து வழிபட்டனர். இக்கோவிலில் சதுர்த்தி விழா, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில், 10 நாள் உற்சவமாக கொண்டாடப்படுகிறது.
செப்., 7 காலை மஞ்சள் நீராட்டு வசந்த உற்சவம், 1,008 லிட்டர் பால் அபிேஷகம், அன்னதானம், புஷ்பாஞ்சலியுடன் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வள்ளிப்பா உள்ளிட்ட உறுப்பினர்கள், கோவில் உதவி கமிஷனர் அம்சா உள்ளிட்ட அலுவலர்கள், அர்ச்சகர்கள், கட்டளை உற்சவதாரர்கள் செய்து வருகின்றனர்.