/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெளிநாடுகளுக்கு காய்கறி ஏற்றுமதி செய்ய நடவடிக்கை குறைதீர் கூட்டத்தில் விவசாயி வலியுறுத்தல்
/
வெளிநாடுகளுக்கு காய்கறி ஏற்றுமதி செய்ய நடவடிக்கை குறைதீர் கூட்டத்தில் விவசாயி வலியுறுத்தல்
வெளிநாடுகளுக்கு காய்கறி ஏற்றுமதி செய்ய நடவடிக்கை குறைதீர் கூட்டத்தில் விவசாயி வலியுறுத்தல்
வெளிநாடுகளுக்கு காய்கறி ஏற்றுமதி செய்ய நடவடிக்கை குறைதீர் கூட்டத்தில் விவசாயி வலியுறுத்தல்
ADDED : செப் 25, 2025 02:07 AM
சேலம் :வெளிநாடுகளுக்கு காய்கறி ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தித்தர, குறைதீர் கூட்டத்தில் விவசாயி வலியுறுத்தினார்.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். அதில் விவசாயிகள் பேசியதாவது:
அபிநவம் ஜெயராமன்: விவசாயிகள் சாகுபடி செய்யும் காய்கறியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். உழவர் சந்தையை போல் மொத்த காய்கறி நிலையத்தை அரசே அமைக்க வேண்டும். புத்திரகவுண்டம்பாளையம், அபிநவம் அணைகள் உடைந்து விழும் அபாயத்தில் உள்ளதால், உடனே மராமத்து செய்து பாதுகாக்க வேண்டும்.
வைத்தியகவுண்டன்புதுார் கோவிந்தராஜ்: விவசாயிகளுக்கு ஏரியில் இருந்து வண்டல் மண், கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். மாட்டுக்கொட்டகை தரைக்கு மொரப்பு மண் தேவைப்படுகிறது. அதற்கு அதிகாரிகள் தர மறுக்கின்றனர். ஆனால் மண் அள்ளி விற்பவர்களுக்கு அனுமதி கொடுக்கின்றனர்.
தலைவாசல் பெருமாள்: தலைவாசல், வீரகனுார் பகுதிகளில், 200 ஏக்கரில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், மரவள்ளி பயிரிட்டுள்ளோம். புது வகை நோய் பாதிப்பால் செடிகள் வளர்ச்சியின்றி கருகி, இலைகள் அனைத்தும் உதிர்ந்து குச்சிகளாக நிற்கின்றன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டத்தில் நிவாரணம் வழங்க வேண்டும்.
ஓமலுார் கணபதி: இந்தாண்டு மேட்டூர் அணை, 6 முறை நிரம்பி உபரிநீர் விணாக கடலில் கலந்துள்ளது. இதை தடுக்க காவிரி - சரபங்கா இணைப்பு வழங்கப்படாத, 40 ஏரிகளுக்கு தேவையான, 115 கோடி ரூபாயை, அரசிடம் இருந்து பெற்று விரைவில் இணைப்பு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது: வட்டத்தில் செப்டம்பரில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு, 651 மி.மீ., தற்போது வரை, 543 மி.மீ., பெய்துள்ளது. 1,16,739 ஏக்கரில் வேளாண் பயிர்களான நெல், மக்காச்சோளம், சோளம், ராகி, நிலக்கடலை உணவு தானியங்கள், எண்ணெய் வித்துகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. யுரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் என, 11,389 டன் உரங்கள், வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 157 டன் நெல், 85 டன் சிறுதானியம், 85 டன் பயறு வகைகள், 42 டன் எண்ணெய் வித்து, 1.3 டன் பருத்தி விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பெற்று பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன், கால்நடை பராமரிப்பு இணை இயக்குனர் பிரகாசம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கமலம்(வேளாண்), தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மஞ்சுளா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.