ADDED : மார் 15, 2026 06:16 AM
சேலம்: போதையில் தகராறு செய்த மகனை, துாங்கிக் கொண்டிருந்த போது அரிவாளால் வெட்டி கொன்ற தந்தை, போலீசில் சரணடைந்தார்.
சேலம் மாவட்டம், தாதனுாரை சேர்ந்தவர் காமராஜ், 50; விவசாயி. இவரது மகன் சூர்யபிரகாஷ், 24; இவர் மீது, பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. பிப்ரவரியில், ஒரு திருட்டு வழக்கில், ஓமலுார் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, 9ல் ஜாமினில் வந்தார்.
'உடனே ஜாமினில் ஏன் எடுக்கவில்லை' என, அவரது தந்தை மற்றும் குடும்பத்தினரிடம், அவர் தொடர்ந்து தகாராறு செய்தார். நேற்று முன்தினம் இரவு, போதையில் வீட்டுக்கு வந்த சூர்யபிரகாஷ், மீண்டும் தகராறில் ஈடுபட்டார். அப்போது, கத்தியை காட்டி மிரட்டினார்.
பின், வீட்டின் முன் பகுதியில் இருந்த கட்டிலில், படுத்து துாங்கினார். ஆத்திரமடைந்த காமராஜ், துாங்கிக்கொண்டிருந்த சூர்யபிரகாஷை அரிவாளால் வெட்டி கொன்றார். பின், வீராணம் போலீசில், காமராஜ் சரணடைந்தார்.
