ADDED : மார் 13, 2024 07:21 AM
ஆத்துார் : ஆத்துார் அருகே வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கல்லுாரி வளாகத்தில் நேற்று மதியம், 2:00 மணிக்கு, காய்ந்த நிலையில் இருந்த புற்கள் தீப்பிடித்தன. கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் வீரர்கள், 2:20க்கு வந்து, மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இதுகுறித்து ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல் தலைவாசல் அருகே லத்துவாடியை சேர்ந்த விவசாயி அங்கமுத்து, 40. இவரது தோட்டத்தில் மாலை, 4:00 மணிக்கு, காய்ந்த மக்காச்சோள பயிர் தீப்பற்றி எரிந்தது. கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். ஆனால் அறுவடைக்கு தயாராக மக்காச்சோளம் எரிந்து நாசமானது. விபத்து குறித்து வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
கோடைகாலம்
கோடைகாலம் தொடங்கிய நிலையில், மேட்டூர் ஆர்.எஸ்., வைத்தீஸ்வரா பள்ளி சுற்றுச்சுவர் அருகே உள்ள கருகிய இலை, தழைகள் நேற்று மதியம் தீப்பற்றி எரிந்தது. மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். அதேபோல் கருமலைக்கூடல் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் கருகிய செடி, கொடிகளில் தீப்பற்றி எரிந்ததையும், தீயணைப்பு குழுவினர் அணைத்தனர்.
குப்பை
தாரமங்கலம் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை, சின்னாகவுண்டம்பட்டி மயானத்தில் கொட்டப்படுகிறது. அங்கு நேற்று மாலை, 5:00 மணிக்கு தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்த, மின்மாற்றி அருகே குப்பை எரிந்து புகைமூட்டமாக காணப்பட்டது. இதனால் மின் துறைக்கு தகவல் தெரிவித்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் குப்பையில் இருந்த கண்ணாடி பாட்டில்கள் வெடித்தன. ஓமலுார் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர்.

