காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: தி.மு.க.., கண்டன ஆர்ப்பாட்டம்
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: தி.மு.க.., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 16, 2026 07:49 AM

சேலம்: காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, அதன் விலை உயர்வை கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், சேலம், கோட்டை மைதானத்தில், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அதில் காலி சிலிண்டர்களை வைத்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் லியோனி பேசுகையில், ''காஸ் சிலிண்டர் விலை உயர்வு, தட்டுப்பாட்டால் டீ, காபி, பலகாரங்கள், உணவு பண்டங்கள் விலை ஏறும். ஏழை நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவர்,'' என்றார். இதில் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதேபோல் அயோத்தியாப்பட்டணத்தில், தி.மு.க.,வின் தெற்கு ஒன்றிய செயலர் விஜயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராஜ்யசபா எம்.பி., சிவலிங்கம், மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார். வீராணத்தில், தி.மு.க.,வின் அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றிய செயலர் ரத்தினவேல்; வாழப்பாடியில் வடக்கு ஒன்றிய செயலர் சக்கரவர்த்தி; தாரமங்கலத்தில், நகராட்சி தலைவர் குணசேகரன்; பனமரத்துப்பட்டியில் நகர செயலர் ரவிக்குமார்; மல்லுாரில், ஒன்றிய செயலர் உமாசங்கர்; ஓமலுாரில் நகர செயலர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆத்துார், கெங்கவல்லி, காடையாம்பட்டி உள்பட மாவட்டம் முழுதும், ஊராட்சி, ஒன்றியம், டவுன் பஞ்சாயத்து, நகராட்சிகளில், தி.மு.க.,வினர், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாடை கட்டி காங்., நுாதனம்
மத்திய அரசை கண்டித்து, சேலம் மாநகர இளைஞர் காங்., சார்பில், கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் சிலிண்டருக்கு பாடை கட்டி மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நுாதன முறையில் போராட்டம் நடத்தினர். அப்போது, காஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்; சிலிண்டர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மாநில இளைஞர் காங்., அரவிந்த், துணை மேயர் சாரதாதேவி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
