ADDED : அக் 19, 2024 01:11 AM
சேலத்தில் கொட்டி தீர்த்த கனமழை
சேலம், அக். 19-
சேலத்தில், நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. திடீரென மதியம், 2:00 மணியளவில் வானத்தில் கரு மேகங்கள் திரண்டு, கொட்டிய கனமழை, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. ஜங்ஷன், 5 ரோடு, 4 ரோடு, அஸ்தம்பட்டி, கோரிமேடு, அம்மாபேட்டை, அன்னதானப்பட்டி, கிச்சிப்பாளையம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களிலும் மழை வெளுத்து கட்டியது.
புது பஸ் ஸ்டாண்டில், முழங்கால் அளவுக்கு குளம்போல தண்ணீர் தேங்கி நின்றதால், பஸ்களை இயக்க முடியாமல் டிரைவர்களும், பஸ்களில் ஏற முடியாமல் பயணிகளும் அவதிப்பட்டனர். சாரதா கல்லுாரி சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடின. காந்தி மைதானம் மினி குளமாகவே மாறியது. சங்கர் நகர், தமிழ்ச்சங்கம் சாலையில் தண்ணீர் முழுமையாக ஆக்கிரமித்து கொண்டதால், மழைநீரில் சாக்கடை நீரும் கலந்து சென்றது.
திடீர் மழையால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். குறிப்பாக, சீலநாயக்கன்பட்டி பைபாஸ் சந்திப்பில் மழைநீர் அதிகளவில் தேங்கியதால், வாகனங்கள் ஸ்தம்பித்து விட்டன.
அதனால், சீலநாயக்கன்பட்டியில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் வரை, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்கு
வரத்து பாதிக்கப்பட்டு, அனைத்து வாகனங்களும் ஊர்ந்து சென்றன. அதேபோல, கொண்டலாம்பட்டி பைபாஸ் சந்திப்பிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து
கொண்டன.

