/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குண்டும், குழியுமான சாலையால் மலைக்கிராம மக்கள் அவதி
/
குண்டும், குழியுமான சாலையால் மலைக்கிராம மக்கள் அவதி
குண்டும், குழியுமான சாலையால் மலைக்கிராம மக்கள் அவதி
குண்டும், குழியுமான சாலையால் மலைக்கிராம மக்கள் அவதி
ADDED : மே 04, 2024 06:58 AM
ஆத்துார் : குண்டும், குழியுமான சாலையால் மலைக்கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தலைவாசல் அருகே மணிவிழுந்தான் ஊராட்சி பூமரத்துப்பட்டி, முட்டல் ஆகிய மலை கிராமங்களில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கல்வராயன்மலை அடிவாரத்தில், ஜடையகவுண்டன்காப்புக்காடு வனப்பகுதியில், இக்கிராமங்கள் உள்ளதால் காட்டெருமை, மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன.
இந்த கிராமங்களுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. 2022 மே, 12ல் நடந்த சிறப்பு மனு நீதி முகாமில், அப்போதைய சேலம் கலெக்டர் கார்மேகத்தை முற்றுகையிட்ட பூமரத்துப்பட்டி, முட்டல் கிராம மக்கள், சாலை, பஸ் வசதி கேட்டு மனு அளித்தனர். ஆனால் இதுவரை சாலை சீரமைப்பு கோரிக்கை நிறைவேறவில்லை.
கடந்த மார்ச், 3ல், லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக, பூமரத்துப்பட்டி, முட்டல் மலை கிராமங்களில், 'பேனர்' வைத்தனர். பின், டி.ஆர்.ஓ., மேனகா உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு செய்தனர். மார்ச், 11ல், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், புது தடத்தில் டவுன் பஸ்சை தொடங்கி வைத்தார். சுதந்திரம் பெற்று, 75 ஆண்டுகளுக்கு பின் பஸ் வசதி கிடைத்தது.
ஆனால் இதுவரை மணிவிழுந்தான், ராமானுஜபுரம், 100 ஏக்கர் மில் பஸ் ஸ்டாப்பில் இருந்து, பூமரத்துப்பட்டி, முட்டல் வரை, 7 கி.மீ., சாலை சீரமைக்கப்படாமல், குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த தடத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால், இரவில் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து மலை கிராம மக்கள் கூறியதாவது:
முட்டல், பூமரத்துப்பட்டி மலைக்கிராமத்துக்கு, 5 கி.மீ., வனத்துறையின் ஜடையகவுண்டன் காப்புக்காடு வழியே செல்கிறது. காப்புக்காடு உள்பட, 7 கி.மீ., சாலை, 'ராட்சத' பள்ளங்களுடன் காணப்படுகின்றன. இந்த வழியே பைக், சைக்கிளில் செல்ல முடிவதில்லை. பலர் விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். பலமுறை சாலை சீரமைக்க மனு அளித்தபோதும் நடவடிக்கை இல்லை. இனியாவது சாலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆத்துார் கோட்ட வனத்துறையினர் கூறுகையில், 'பூமரத்துப்பட்டி, முட்டல் மலை கிராமத்துக்கு செல்லும் சாலை சீரமைக்க, நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. நிதி ஒதுக்கீடு செய்த பின், சாலை சீரமைக்கப்படும்' என்றனர்.