/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர் திறப்பு
/
மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர் திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர் திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர் திறப்பு
ADDED : ஜூலை 28, 2025 03:08 AM

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து பாசனம் மற்றும் உபரியாக வினாடிக்கு, 1 லட்சம் கன அடி நீர் காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டது.
கர்நாடகாவின் கபினி அணையின் மொத்த நீர்மட்டம், 65 அடி. நீர் இருப்பு, 19.5 டி.எம்.சி., கே.ஆர்.எஸ்., அணையின் மொத்த நீர்மட்டம், 124 அடி. நீர் இருப்பு, 49.5 டி.எம்.சி., காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தென்மேற்கு பருவமழையால் கர்நாடகா அணைகளின் நீர்வரத்து அதிகரித்தது. கபினி, கே.ஆர்.எஸ்., நிரம்பியதால், அந்த அணைகளுக்கு வந்த நீர் முழுமையாக காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டது.
அதன்படி நேற்று காலை, கே.ஆர்.எஸ்., அணைக்கு வினாடிக்கு, 52,856 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து, 56,474 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. கபினி அணைக்கு வினாடிக்கு, 42,000 கனஅடி நீர் வந்த நிலையில் வினாடிக்கு, 44,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதன்மூலம் இரு அணைகளில் இருந்து திறக்கப்பட்ட, 1,00,474 கனஅடி உபரிநீர், காவிரியாற்றில் பெருக்கெடுத்து வந்தது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. ஏற்கனவே கர்நாடகா அணைகளின் உபரிநீர் வரத்து அதிகரிப்பால் கடந்த, 25ல், மேட்டூர் அணை நடப்பாண்டில், நான்காம் முறை நிரம்பியது. அணையில் இருந்து பாசனம் மற்றும் உபரியாக முதல் கட்டமாக, 25,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
அதே நாள் இரவு, வினாடிக்கு, 25,400 கனஅடியாக இருந்த நீர்வரத்து, 26ல், 35,400 கனஅடி; 27ல், 45,400 கனஅடி; நேற்று மதியம், 75,400 கனஅடி; மாலை, 6:00 மணிக்கு, 1 லட்சம் கன அடியாக படிப்படியாக அதிகரித்தது. அதற்கேற்ப நேற்று மாலை, 6:00 மணிக்கு, அணையில் இருந்து பாசனத்துக்கு, 18,000 கனஅடி நீர், மின் உற்பத்தி நிலையங்கள் வழியாகவும், உபரியாக வினாடிக்கு, 82,000 கனஅடி நீர், 16 கண் மதகு வழியாகவும் வெளியேற்றப்பட்டது.
உபரிநீர், பாசன நீர் திறப்பு அதிகரிப்பால், முன்னதாக காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மேட்டூர் வருவாய்த்துறை அலுவலர்கள் சார்பில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
விடுமுறை நாள் என்பதால், மாலை, 6:00 மணிக்கு, 16 கண் மதகு வழியே வெளியேற்றிய உபரிநீரை, ஏராளமானோர் பார்வையிட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை, பாலத்தில் அனுமதிக்கவில்லை. இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. மேலும், வெள்ளப்பெருக்கால், சேலம் மாவட்டம் பூலாம்பட்டியில் இருந்து ஈரோடு மாவட்டம், நெருஞ்சிப்பேட்டைக்கு இயக்கப்படும் விசைப்படகு போக்குவரத்து இயக்கம் நிறுத்தப்பட்டது.