/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பச்சிளம் குழந்தை இறப்பு 'பாரசிட்டமால்' காரணமா?
/
பச்சிளம் குழந்தை இறப்பு 'பாரசிட்டமால்' காரணமா?
ADDED : அக் 11, 2025 01:54 AM
மேட்டூர்:மேட்டூர் அருகே, பிறந்து 13 நாட்களே ஆன ஆண் குழந்தை இறந்ததற்கு, காய்ச்சலுக்கு வழங்கப்படும் பாரசிட்டமால் மருந்து காரணமா என, விசாரணை நடக்கிறது.
சேலம் மாவட்டம், கொளத்துார் பாலமலை ஊராட்சி, பாத்திரமடுவை சேர்ந்த கட்டட தொழிலாளி பழனிசாமி, 30; இவரது மனைவி புஷ்பா, 27. தம்பதிக்கு செப்., 27ல் ஆண் குழந்தை பிறந்தது.
காய்ச்சல் ஏற்பட்டதால் நேற்று முன்தினம் காலை, மூலக்கடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, குழந்தையை பெற்றோர் துாக்கி சென்றனர்.
பொது மருத்துவர் சரவணன் பரிசோதித்து, பாரசிட்டமால் மருந்து கொடுத்துள்ளார். மீண்டும் காய்ச்சல் வந்தால், சில சொட்டு மட்டும் தரும்படி கூறியுள்ளார். இரவு, 10:00 மணிக்கு காய்ச்சல் தொடரவே, புஷ்பா மருந்து புகட்டிஉள்ளார்.
சிறிது நேரத்தில் குழந்தை அசைவில்லா நிலைக்கு சென்றது. மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று அதிகாலை குழந்தையை கொண்டு சென்றனர். பரிசோதனையில் குழந்தை இறந்து விட்டது தெரிந்தது.
கொளத்துார் போலீசார், குழந்தைக்கு தரப்பட்ட பாரசிட்டமால் மருந்து பாட்டிலை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். சேலம் அரசு மருத்துவமனைக்கு, குழந்தை உடல் அனுப்பி வைக்கப்பட்டது. உடற்கூறு பரிசோதனைக்கு பிறகே, இறப்புக்கான காரணம் தெரியவரும் என, போலீசார் கூறினர்.