ADDED : மார் 20, 2024 02:16 AM
சேலம்:சேலம்
மாவட்டம் சங்ககிரி, தேவூர் அருகே அரசிராமணி மலைமாரியம்மன் கோவில்
தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை, 45. கூரை வீட்டில் வசித்தார். அந்த கூரையை
புதுப்பிக்க, ஆலச்சம்பாளையம், வடக்கு தெருவை சேர்ந்த சேட்டு முத்து,
44, என்பவர், 15,000 ரூபாய் பேசி, வேலை செய்துவிட்டு பணத்தை பெற்றார்.
பின்,
2014 நவ., 13ல் மீண்டும் அண்ணாதுரையிடம் பணம் கேட்டார். அப்போது
ஏற்பட்ட தகராறில் அண்ணாதுரை, சேட்டு முத்துவை கத்தியால் குத்தி
காயப்படுத்தினார். இதுதொடர்பாக அண்ணாதுரையை, போலீசார் கைது
செய்தனர்.
இந்த முன்விரோதத்தால், 2015 ஏப்., 21ல் சேட்டுமுத்து,
அவரது தம்பி சவுந்தர்ராஜன், 38, உள்பட, 10 பேர், அண்ணாதுரை, அவரது
மனைவி தங்கமணியை உருட்டுக்கட்டை, கல்லால் தாக்கி, வீட்டில் இருந்த
பொருட்களை சேதப்படுத்தினர். இதில் அண்ணாதுரை இறந்தார். இதையடுத்து
கொலை வழக்குப்பதிவு செய்து, எதிரிகளை போலீசார் கைது செய்தனர்.
இந்த
வழக்கு விசாரணை சேலம் நீதிமன்றத்தில் நடந்தது. அதில் சவுந்தர்ராஜன்,
நாகராஜமணி, 35, மாணிக்கம், 44, தங்கவேல் 42, குருசாமி, 39,
ஆகியோருக்கு ஆயுள் தண்டனையுடன், தலா, 9,000 ரூபாய் அபராதம்
விதிக்கப்பட்டது. வழக்கில் இருந்து நாராயணன், 51, கார்த்தி, 33,
கார்த்திக், 34, விடுவிக்கப்பட்டனர். இதனிடையே சேட்டு முத்து,
சிவக்குமார், 38, இறந்து விட்டனர்.

