/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் மாவட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி பரப்பளவு 4239 ஹெக்டராக அதிகரிப்பு
/
சேலம் மாவட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி பரப்பளவு 4239 ஹெக்டராக அதிகரிப்பு
சேலம் மாவட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி பரப்பளவு 4239 ஹெக்டராக அதிகரிப்பு
சேலம் மாவட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி பரப்பளவு 4239 ஹெக்டராக அதிகரிப்பு
ADDED : டிச 31, 2024 06:30 AM
ஆத்துார் : சேலம் மாவட்டத்தில், கடந்தாண்டை விட மக்காச்சோளம் சாகுபடி பரப்பளவு, 4,239 ஹெக்டராக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், துாத்துக்குடி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில், அதிகளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் 4.26 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும், 30 லட்சம் டன் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், 45 லட்சம் டன் தேவைப்படுகிறது. மொத்த உற்பத்தியில், 70 சதவீதம் கால்நடைகளுக்கு தீவனமாகவும், 10 சதவீதம் ஸ்டார்ச் உற்பத்திக்கும், 12 சதவீதம் இதர துறைகளுக்கும், 8 சதவீதம் மட்டுமே உணவு பயன்பாட்டுக்கு செல்கிறது.
ஆத்துார் விதை மற்றும் பூச்சி மருந்து மொத்த விற்பனையாளர் குமார்: கோவை வேளாண் பல்கலை மற்றும் தனியார் நிறுவனங்கள், 100க்கும் மேற்பட்ட ரகங்கள், மக்காச்சோள விதைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றனர். ஏக்கருக்கு, 8 கிலோ விதை நடவு செய்தால், 110 முதல், 120 நாளில் அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு, 35 முதல், 45 மூட்டை (ஒரு மூட்டை 100 கிலோ) என 4 டன் மகசூல் கிடைக்கிறது.
15 ஆண்டுகளாக சேலம் மாவட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி அதிகரித்துள்ளது. 2022, 2023ல், ஒரு மூட்டை மக்காச்சோளம், 1,900 முதல், 2,100 ரூபாய் வரை இருந்தது. கடந்த, செப்., மாதத்தில், தேவை அதிகளவில் இருந்தபோது மூட்டை, 3,200 ரூபாய்க்கு விலைபோனது. சூரியகாந்தி, மக்காச்சோளம், கோதுமை போன்ற எண்ணெய் வித்து, தானியம் அதிகளவில் உற்பத்தி செய்யும் உக்ரைனில் போர் காரணமாக, இந்தியாவில் இருந்து தான், மக்காச்சோளம் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தீவனம், ஊட்டச்சத்து மூலப்பொருளாகவும், எத்தனால் உற்பத்திக்கு அதிகளவில் பயன்படுத்துவதால், மக்காச்சோளம் தேவை அதிகரித்துள்ளது என்றார்.
சேலம் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் சிங்காரம்: சேலம் மாவட்டத்தில், ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளில், அதிகளவு மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. 2023ல், மாவட்டம் முழுவதும், 39 ஆயிரத்து, 637 ஹெக்டேர், 2024ல், 43 ஆயிரத்து, 876 ஹெக்டேர் மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்யப்பட்டது. கடந்த, 2023ஐ விட, 2024ல், 4,239 ஹெக்டேர் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. 2023ல், மூட்டை, 2,150 ரூபாயாக இருந்தது. 2024ல் 2,300 முதல், 2,400 ரூபாய் வரை விலை உள்ளதால், விவசாயிகள் ஆர்வமாக பயிர் செய்து வருகின்றனர் என்றார்.
ஆத்துார், தலைவாசல், வாழப்பாடி உள்பட, 14 இடங்களில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட மக்காச்சோள வியாபாரிகள், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கின்றனர். கெங்கவல்லியில், மாதம் 4,000 முதல், 5,000 மூட்டை, ஆத்துார், வாழப்பாடியில் தலா, 3,000 மூட்டை கொள்முதல் உள்ளது என, வேளாண் அலுவலர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில், 2024--25ல், சேலம், திருப்பூர், திண்டுக்கல், பெரம்பலுார், துாத்துக்குடி, விருதுநகர், கடலுார், கள்ளக்குறிச்சி, ஈரோடு, விழுப்புரம், நாமக்கல், தர்மபுரி, திருச்சி, அரியலுார், மதுரை, தேனி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய, 18 மாவட்டங்களில் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வீரிய ஒட்டு ரக மக்காச்சோள விதைகள், திரவ உயிர் உரங்கள் இயற்கை உரம், நானோ யூரியா ஆகியவற்றை உள்ளடக்கிய, 6,000 ரூபாய் மதிப்பிலான, 50,000 தொகுப்புகள் விவசாயிகளுக்கு வழங்குவதாகவும், இதன்மூலம் 50,000 ஹெக்டேரில் மக்காச்சோள சாகுபடி ஊக்குவிக்கப்படும் என, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். இத்திட்டமும் நடைமுறையில் உள்ளது என, வேளாண் அலுவலர்கள் கூறினர்.