ADDED : மார் 21, 2026 04:35 AM

சேலம்: கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில், 1 கோடி ரூபாய் அளவுக்கு மஞ்சள் மூட்டைகள் எரிந்து நாசமாகின.
சேலம், பள்ளப்பட்டியை சேர்ந்தவர் ஹரிபிருந்தா பாஸ்கர், 30. இவருக்கு சொந்த மான மஞ்சள் கிடங்கு, அதே பகுதியில், சூரமங்கலம் பிரதான சாலையோரம் உள்ளது.
அங்கு, சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட மஞ்சள் மூட்டைகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு கிடங்கில் தீப்பற்றி கரும்புகை வெளியேறியது.
சூரமங்கலம், செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் நான்கு மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். இதில், 1,000க்கும் மேற்பட்ட மஞ்சள் மூட்டைகள் கருகி நாசமாகின. பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
கிடங்கு உரிமையாளர் ஹரிபிருந்தா பாஸ்கர் கூறுகையில், ''ஒரு கோடி ரூபாய் மதிப்பில் மஞ்சள் மூட்டைகள் நாசமாகின,'' என்றார்.
