/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை மூன்றாவது முறையாக நிரம்ப வாய்ப்பு
/
மேட்டூர் அணை மூன்றாவது முறையாக நிரம்ப வாய்ப்பு
ADDED : டிச 31, 2024 07:38 AM

மேட்டூர்: நீர்மட்டம் நேற்று, 119.87 அடியாக உயர்ந்ததால், இரு நாட்களில் மேட்டூர் அணை மூன்றாவது முறை நிரம்ப வாய்ப்புள்ளது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., கடந்த ஜூலை, 30ல் அணை, 120 அடியான முழு கொள்ளளவை எட்டியது. மீண்டும் ஆக.,12ல், 2வது முறை, 120 அடியை எட்டியது. அதன் பின் நீர்வரத்து சரிந்த நிலையில், அணையில் இருந்து தொடர்ச்சியாக டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. இதனால், கடந்த அக்.,18ல் அணை நீர்மட்டம், 89.26 அடியாக சரிந்தது.
தொடர்ந்து டெல்டா மாவட்டங்களிலும், தமிழக - கர்நாடகா எல்லையில், நீடித்த மழையால் மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரித்த நிலையில் நீர் திறப்பு குறைக்கப்பட்டது. அதற்கேற்ப அணை நீர்மட்டம் படிப்படியாக உயர துவங்கியது. நேற்று நீர்மட்டம், 119.87 அடியாகவும், நீர் இருப்பு, 93.26 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 2,516 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 2,331 கனஅடியாக சரிந்தது.
அணை நிரம்ப இன்னமும், 0.13 அடி, 0.21 டி.எம்.சி., நீர் மட்டுமே தேவை. அணைக்கு வரும் நீரில், 800 கனஅடி நீரை வெளியேற்றும் நிலையில், 1,716 கனஅடி நீர் மட்டுமே சேமிக்கப்படுகிறது. இதனால், நிரம்ப தாமதமாவதால் மேட்டூர் அணை, 2024ல் ஆண்டின் இறுதி நாளான இன்று அல்லது நாளை மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.