/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் காளியம்மன் கோவில் நிலம் உயர்நீதிமன்ற உத்தரவால் அளவீடு
/
மேட்டூர் காளியம்மன் கோவில் நிலம் உயர்நீதிமன்ற உத்தரவால் அளவீடு
மேட்டூர் காளியம்மன் கோவில் நிலம் உயர்நீதிமன்ற உத்தரவால் அளவீடு
மேட்டூர் காளியம்மன் கோவில் நிலம் உயர்நீதிமன்ற உத்தரவால் அளவீடு
ADDED : ஏப் 29, 2025 02:07 AM
மேட்டூர்:
உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மேட்டூர், துாக்கனாம்பட்டி ஆதிசக்தி காளியம்மன் கோவில் நிலம், நேற்று வருவாய்துறை நில அளவையர் மூலம் அளவீடு செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம், மேட்டூர் கிழக்கு பிரதான சாலையோரம், துாக்கானம்பட்டியில் ஆதிசக்தி காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து, வீடு கட்டியதால் கருவறை மட்டும் கோவில் நிலத்திலும், பிரகாரம் நெடுஞ்சாலைதுறை நிலத்திலும் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான, 4.5 சென்ட் நிலத்தில், கால் சென்ட் மட்டுமே இருக்கும் நிலையில் ஆக்கிரமிப்பில் உள்ள இதர நிலங்களை மீட்க, அப்பகுதி மக்கள் கடந்த ஜன.,7ல் மறியலில் ஈடுபட்டனர்.
கோவில் செயல் அலுவலர் (பொ) மாதேஸ்வரன், மேட்டூர் இன்ஸ்பெக்டர் அம்சவல்லி ஆகியோர், மறியல் செய்தவர்களிடம் பேசி கோவில் நிலத்தை அளக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். கடந்த ஜன., 8ல் அறநிலையத்துறை தனி தாசில்தார் (ஆலயங்கள்) ஜெயவேலு தலைமையில், சர்வேயர்கள் கோவில் ஆக்கிரமிப்பு நிலத்தை அளக்க சென்றனர். அதற்கு அப்பகுதியை சேர்ந்த, மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் ஆக்கிரமிப்பு நிலங்களை அறநிலையத்துறை அளவீடு செய்யக்கோரி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தால், அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டு, நிலத்தை அளக்க வேண்டும் என சேலம் கலெக்டர், அறநிலையத்துறை உதவி ஆணையர் உள்பட ஒன்பது பேருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நேற்று மேட்டூர் வருவாய் ஆய்வாளர் வெற்றிவேல், வி.ஏ.ஓ., விஜயகுமார் முன்னிலையில், நில அளவையர் கிருஷ்ணமூர்த்தி கோவில் நிலத்தை அளவீடு செய்தார். அப்போது, செயல் அலுவலர் மாதேஸ்வரன் கூறுகையில், ''நில அளவையர் மூலம் கோவில் நிலம் அளக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை அறநிலையத்துறைக்கு வழங்கியதும், ஆக்கிரமிப்பு இருக்கும் பட்சத்தில், அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.