வைக்கோல் ஏற்றிச் சென்ற மினி லாரி தீ பிடித்து விபத்து
வைக்கோல் ஏற்றிச் சென்ற மினி லாரி தீ பிடித்து விபத்து
ADDED : மார் 31, 2026 05:50 AM
ஆத்துார், மின் ஒயர் உரசியதில், வைக்கோல் ஏற்றிச் சென்ற மினி லாரி தீ பிடித்து எரிந்தது.
ஆத்துார் அருகே, அம்மம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் டிரைவர் ரமேஷ், 50. இவர், வைக்கோல் வியாபாரமும் செய்து வருகிறார். நேற்று தஞ்சாவூரில் இருந்து, 165 வைக்கோல் கட்டுகளை ஏற்றிக் கொண்டு, நேற்று காலை, 11:30 மணியளவில் ஆத்துார் வழியாக பாலாண்டியூர் பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது, சாலையோர மின் ஒயர் உரசியதில், வைக்கோல் தீப்பற்றி எரிந்தது. காலை, 11:40 மணியளவில் ஆத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். 11:55 மணியளவில் சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 70க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகள் எரிந்து நாசமானது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்ததால், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மினி லாரி தப்பியது.
