/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
படகு இல்லத்தில் '3டி' தொழில்நுட்ப காட்சி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தகவல்
/
படகு இல்லத்தில் '3டி' தொழில்நுட்ப காட்சி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தகவல்
படகு இல்லத்தில் '3டி' தொழில்நுட்ப காட்சி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தகவல்
படகு இல்லத்தில் '3டி' தொழில்நுட்ப காட்சி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தகவல்
ADDED : அக் 05, 2024 01:11 AM
படகு இல்லத்தில் '3டி' தொழில்நுட்ப காட்சி
நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தகவல்
ஏற்காடு, அக். 5-
சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தலத்தை மேம்படுத்த, அங்குள்ள படகு இல்லத்தில் நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். அங்குள்ள வசதிகள், என்ன வகை படகுகள், கழிப்பிட வசதி உள்ளதா, தினமும் வந்து செல்லும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து படகு இல்ல ஏரியை நடந்து சென்றபடி பார்வையிட்டார்.
இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள, 300 சுற்றுலா தலங்களை, சர்வதேச தரத்துக்கு இணையான வசதிகளை ஏற்படுத்த, சுற்றுலா பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று முதல்வரால், சேலம் மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சிக்கு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஏற்காடு கோடை விழா ஆண்டுதோறும் சுற்றுலா பயணியர் இடையே வரவேற்பை பெற்று வருகிறது. 2023 - 2024ம் ஆண்டின் சட்டசபை மானியக்கோரிக்கை அறிவிப்பின்படி, ஏற்காடு சுற்றுலா தலத்தில் நிலச்சீரமைப்பு, காட்சிமுனை, உட்கட்டமைப்பு, பிற சுற்றுலா வசதிகளை மேம்படுத்த, 9.71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, கடந்த ஜூலை, 24ல் சுற்றுலாத்துறையால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பக்கோடா மற்றும் லேடீஸ் காட்சிமுனையில் நுழைவு வளைவு, சிறு வணிக கடைகள், சுகாதார வளாகங்கள், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். கிளியூர் நீர்வீழ்ச்சியில் வாகன நிறுத்துமிடம், நடைபாதை உள்ளிட்ட பணிகள்; ஒண்டிக்கடை சந்திப்பு சாலையில் நடைபாதைகளை அழகுபடுத்தல், தெருவிளக்குகள், வழிகாட்டி பதாகைகள், பிற சுற்றுலா வசதிகள் மேம்படுத்தல்; படகு இல்லத்தில் இருந்து சுற்றுச்சூழல் பூங்கா வரை இணைப்பு பாலம்; படகு இல்லம் அருகே நடைபாதை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.தமிழ்நாடு ஓட்டல் விடுதி குடில்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. படகு இல்லத்தில் மிதவை உணவகம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து வல்லுனர் குழு ஆய்வு செய்து சென்றுள்ளது. இதற்கான அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.ஏற்காடு வரும் சுற்றுலா பயணியருக்கு புது சுற்றுலா அனுபவங்களை வழங்க, படகு இல்லத்தில், '3டி' காட்சி தொழில்நுட்பத்துடன் கூடிய நீர் சார்ந்த ஒலி, ஒளிக்காட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கை விரைவில் கிடைத்ததும், நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்.பி.,க்களான சேலம் செல்வகணபதி, கள்ளக்குறிச்சி மலையரசன், அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.